திங்கள், ஜூன் 25, 2012

அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்து விண்வெளியில் ஆய்வுக் கூடம்: சீனாவின் முயற்சி வெற்றி !

 விண்வெளியின் ஆய்வு மையம் அமைக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியை எட்டியுள்ளது சீனா. அந்நாட்டு விண்வெளி வீரர்கள் தங்கள் விண்கலத்தை சோதனைமுறையில் அமைக்கப்பட்ட ஆய்வு கூடத்துடன் தங்கள் சொந்த முயற்சியில் வெற்றிகரமாக இணைத்தனர்.
 இதன் மூலம் அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் தடம் பதித்த பெருமையை சீனா பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக அங்கு நிரந்தரமான விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் பணியை துரிதப்படுத்த இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சீனாவின் கோபி பாலைவன பகுதியில் இருந்து ஜூன் 16-ல் ஷென்ஷோ-9 விண்வெளி ஓடம் அனுப்பப்பட்டது.

அதில் பெண் விண்வெளி வீராங்கனை லியூ யாங் உள்பட மூவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டனர். லியூ யாங், சீனாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளிக்குச் சென்ற அவர்கள் அங்கு பல்வேறு பணிகளை முடித்தபின், தங்கள் விண்கலத்தை சோதனை ரீதியில் அமைக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்துடன் தாங்களாகவே இணைக்கும் முயற்சியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.

விண்வெளியில் இந்தப் பணியை மேற்கொள்வது மிகவும் சிக்கலானதாகும். ஏனெனில் விண்வெளி வீரர்கள் இதில் மிகத்துல்லியமாகப் பணியாற்ற வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 15 முயற்சிகளுக்குப் பின்னரே ரஷியா இந்தப் பணியை வெற்றிகரமாக முடிந்தது.

ஆனால் சீன விண்வெளி வீரர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றனர். சுமார் 10 நிமிடங்களில் இப்பணி நிறைவடைந்தது. இப்பணிகளை தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

விண்வெளியில் வீரர்கள் செய்யும் பணிகள் சீன அரசு தொலைக்காட்சியில் பொதுமக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பானது.

இப்பணிக்காக தரையில் இருந்தபோது விண்வெளி வீரர்களுக்கு 1,500 முறை செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இணைப்புப் பணியை வெற்றிகரமாக முடித்த விண்வெளி வீரர்கள் மூவருக்கும் தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் பாராட்டுத் தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.

2020-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமாக ஆய்வு மையத்தை அமைக்க சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.

விண்வெளியில் உள்ள மூவரும் அடுத்த வாரத்தில் பூமிக்குத் திரும்பவுள்ளனர். விண்வெளியில் நிரந்தர ஆய்வுக் கூடம் அமைக்கும் இலக்கை நமது நாடு ஏறக்குறைய எட்டிவிட்டது என்று அந்நாட்டு தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக