இந்தியாவுடன் போர் என்று வந்தால், அணு ஆயுதத்தை பிரயோகிப்பது என்று தீர்மானித்தால், பாகிஸ்தானால் எட்டு விநாடிகளில் அணு குண்டை போட முடியும் என்று முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேரின் முக்கிய உதவியாளர் ஒருவர் தனது டைரிக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.2001ம் ஆண்டு இந்தத் தகவலை பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு ஜெனரல் தன்னிடம் கூறியதாக அவர்
கூறியுள்ளார். அவரது பெயர் அலிஸ்டைர் கேம்பெல். இவர் டோனி பிளேரின் முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி ஆவார்.
The Burden of Power என்ற பெயரில் தனது குறிப்புகளை அவர் புத்தகமாக்கியுள்ளார். அதை கார்டியன் பத்திரிக்கை தொடராக வெளியிட்டு வருகிறது.
செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல் முதல் 2003ம் ஆண்டு ஈராக் போர் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் தனது பதவியிலிருந்து இறங்கியது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளை, முக்கியத் தகவல்களை இதில் இடம் பெறச் செய்துள்ளார் அலிஸ்டைர்.
அதில் அலிஸ்டைர் கூறியிருப்பதாவது...
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறமை குறித்து இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவால் தங்களுக்கு எப்போதும் ஆபத்து உண்டு என்ற நிரந்தரமான பயத்தில் பாகிஸ்தான் இருந்தாலும் கூட அவர்களது திறமையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்பதே உண்மை.
இந்தியா ஒரு நிலையில்லாத நாடு, மக்கள் தொகை அதிகம், நாட்டின் அளவும் அதிகம். எனவே நிச்சயம் ஒரு நாள் எங்களுக்கும், அவர்களுக்கும் போர் வெடிக்கும். அப்படி ஒரு நிலை வந்தால், அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் வந்தால் எங்களால் எட்டே விநாடிகளில் இந்தியா மீது அணு குண்டுகளை போட முடியும். அந்த அளவுக்கு எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன என்று ஒரு ஜெனரல் கூறினார் என்று அலிஸ்டைர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருப்பதை விட அதிக அளவிலான அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக ஏற்கனவே ஒரு புள்ளிவிவரத் தகவல் வெளியாகியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக