லண்டன் - சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அந்த அரசு அனுமதி அளித்துள்ளது.
லண்டனில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான பெண் தடகள வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தல்மா மல்ஹாஸ் என்ற பெண் மட்டும் தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர்
குதிரைச் சவாரி போட்டியில் கலந்து கொள்வார். இவர் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். அந்தப் போட்டியில் அவர் சவுதி அரேபியா சார்பாக செல்லாமல் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டார்.
பெண் தடகள வீராங்கனைகள் கலந்து கொண்டால் இது ஒலிம்பிக்கில் சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்கள் கலந்து கொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டியாக அமையும். சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக மன்னர் அப்துல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் 27.07.2012 அன்று தொடங்க உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக