தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யலாம் என்று அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பெரும்பாலான பா.ஜனதா தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணிகள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அப்படி நாம் அறிவிக்கும் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும் என்றார்.
நிதிஷ்குமாரின் இந்தபேச்சு தேசிய ஜனநாயக கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளது. அவர் மறைமுகமாக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று அறிவித்திருப்பதால் கூட்டணியில், பிளவு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது. இதை மீறினால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுபற்றி அக்கட்சி எம்.பி. சபீர் அலி கூறும்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்தால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறும். எங்களது கட்சி யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக