வியாழன், ஜூன் 21, 2012

பிரணாபுக்கு திரிணாமுல் கட்சி எம்பி ஆதரவு - கட்சி உடையுமா?

 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அக்கட்சி உடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியால் முன்மொழிய, அம்மாநில முதல்வரும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜியோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கபீர் சுமனுக்கு இன்று தொலைபேசிய பிரணாப் முகர்ஜி, தமக்கு ஆதரவளிக்கக் கோரினார். சுமனும் பிரணாபை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

இதைக் கண்டித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்பியான டெரெக் ஓ பிரியன் தன்னுடைய ட்விட்டரில், "காங்கிரஸ் கட்சி திரிணாமுல் கட்சியை உடைக்க முயல்கிறதா? முயலுங்கள்; மீண்டும் முயலுங்கள். ஆனால் அது உடையாது" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாகக் கூறிய கபீர் சுமன், பிரணாப் முகர்ஜி தம்முடைய உடல் நலம் குறித்து விசாரிக்க மட்டுமே தொலைபேசினார் என்றும் தன்னிடம் வாக்கு கோரவில்லை என்றும் கூறினார். "பிரணாப் முகர்ஜி போன்ற உயர்வானவர்கள் வாக்கு கேட்பதற்காக எனக்குத் தொலைபேசுவார்களா? அவர் தனக்கு வாக்களிக்குமாறு ஒருபோதும் கேட்கவில்லை. ஆனால் அவர்தான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே பிரணாப் முகர்ஜி திரிணாமுல் கட்சியை உடைக்க முயல்வதாக மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பிரணாப் தமக்கு ஆதரவு கோரி மம்தாவுக்குத்தான் தொலைபேசியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூற்றை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, திரிணாமுல் கட்சியை உடைக்க நாங்கள் ஏன் முயல வேண்டும். அவர்கள் எங்கள் கூட்டணியில் உள்ளனர். நாங்கள் இதுபோன்று செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தவர் குடியரசுத் தலைவர் ஆவதற்கு அம்மாநில முதல்வரே எதிர்ப்பாளராக உள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டு தங்கள் மாநிலத்தவர் குடியரசுத் தலைவர் ஆவதை உறுதி செய்வார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக