செவ்வாய், ஜூன் 26, 2012

40 ஆண்டுகளாக கட்சியில் இருந்த பிரணாப், ஜனாதிபதி தேர்தலுக்காக காங்கிரஸில் இருந்து பிரியாவிடை

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டிருந்த, காங்கிரஸ் கட்சியின் உறவை, பிரணாப் முகர்ஜி துறந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ராஜினாமா செய்துள்ள அவருக்கு, காங்கிரஸ் கட்சி பிரியாவிடை அளித்தது. இன்று, பிரதமரை சந்தித்து, நிதியமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதோடு, நாளை மறுநாள்
, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

கை நழுவிய வாய்ப்பு:காங்கிரஸ் கட்சியில், நீண்ட காலமாக அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி அமைச்சரவையில், மிக முக்கிய பங்கு வகித்ததோடு மட்டுமின்றி, அவரது நம்பிக்கைக்கு உரிய தளபதியாக திகழ்ந்தார்.அவரது மறைவுக்கு பின், பிரதமர் பதவி மீது ஆசைப்பட்ட பிரணாப்பிற்கு, அந்த வாய்ப்பு கிட்டவில்லை. ராஜிவ் மறைந்த போதும், நரசிம்மராவுக்கு பிரதமர் பதவி கிடைத்தது. 2004ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோதும், மன்மோகன் சிங்கிற்கே அதிர்ஷ்டம் அடித்தது.பிரதமர் பதவிக்கான வாய்ப்பை, மூன்று முறை கோட்டை விட்ட பிரணாப் முகர்ஜிக்கு, இறுதியாக, ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக, அவர் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில், தற்போதுள்ள மூத்த தலைவர்களில், பிரணாப் மிக முக்கியமானவர். பழுத்த அனுபவம் நிறைந்தவர். அதனால், அவருக்கு எதிர் அணியில் உள்ள சில கட்சிகளும், ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசியல் பேசவில்லை:நீண்ட காலமாக கட்சியில் இருந்து வருகிறார் என்பதோடு மட்டுமல்லாது, கட்சியின் உயர் அதிகாரம் மிக்க அமைப்பாகக் கருதப்படும், காங்கிரஸ் காரிய கமிட்டி யில், 1978ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளார். இந்த கமிட்டியின் மூத்த உறுப்பினர் என்பதாலும், அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இருப்பதாலும், அவரை கவுரவிக்கும் வகையில், பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்துவதற்காக, நேற்று டில்லியில், காரிய கமிட்டி கூடியது.காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இல்லத்தில் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். மொத்தம், 30 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த காரணத்திற்காக, தடையுத்தரவு போடப்பட்ட திக்விஜய் சிங்கும், மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தும் மட்டுமே, நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிற தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், அரசியல் விவகாரங்கள் குறித்து, எதுவும் பேசப்படவில்லை.

நீண்டகால உறவு:முழுக்க முழுக்க, பிரணாப் முகர்ஜிக்காகவே நடத்தப்பட்ட காரிய கமிட்டி கூட்டம், மொத்தம், 55 நிமிடங்கள் நடைபெற்றது. கூட்டத்தில், பிரணாப் முகர்ஜியை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் பேசியவர்கள் என்று பார்த்தால், சோனியா உட்பட ஆறு பேர் மட்டுமே.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா கூறியதாவது:காங்கிரஸ் கட்சியுடன் மிக நீண்டகால உறவை கொண்டவர் பிரணாப். கட்சியில் இவர் வகிக்காத பதவிகளே இல்லை எனக் கூட கூறலாம். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர், மாநில காங்கிரஸ் தலைவர் என, பல முக்கிய பதவிகளை வகித்தார். கட்சியில் என்று தான் இல்லை.ஆட்சி அதிகாரத்திலும், பிரணாப் முகர்ஜி நிறைய பதவிகள் வகித்தார். கட்சி, ஆட்சி என இரண்டிலுமே, இவரது பங்களிப்பு என்பது அளவிடற்கரியது, போற்றத்தக்கதும் கூட. எல்லா வகைகளிலும், பிரணாப் முகர்ஜி ஆற்றிய சேவை என்பது, என்றென்றும் நிலைத்து நிற்கும்.

ஒருமனதாக தேர்வு :ஜனாதிபதி தேர்தலில், இவரது தேர்வு என்பது, ஒருமுகமான தேர்வு. கட்சி இவரை ஒருமனதாகவே தேர்வு செய்து நிறுத்தியுள்ளது. தவிர ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஏகோபித்த ஆதரவும், இவருக்கு உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு, மிகவும் பொருத்தமான நபராக, பிரணாப் விளங்குவார் என்பதில் ஐயமில்லை.அடுத்த மாதம் நடைபெறப்போகும் தேர்தலில், இவர் மிக அதிகமான ஓட்டுக்கள் வாங்கி, வெற்றியை பெற்று, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதி. ஓட்டு வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் நம்புகிறோம். அத்தகைய வெற்றி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு, காங்கிரஸ் காரிய கமிட்டி, தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.இவ்வாறு சோனியா பேசினார்.

ஈடுசெய்ய முடியாது:பிரணாப் முகர்ஜியை வாழ்த்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, ""அரசாங்கத்தில், பிரணாப் முகர்ஜி மிக முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். ஆட்சி நிர்வாகத்தில், இவரது பங்களிப்பு என்பது மிகப்பெரிய அவசியமாகவே இருந்து வந்துள்ளது. அரசின் பல்வேறு முக்கிய விஷயங்களிலும், நிர்வாக நடவடிக்கைகளிலும், தீர்க்கமான முடிவெடுப்பதற்கு, மிகவும் உற்ற துணையாக இருந்து வந்தவர் பிரணாப் முகர்ஜி. அவரது பங்களிப்பு, ஈடுசெய்ய முடியாதது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, அமைச்சரவையை விட்டு அவர் வெளியேறவுள்ளார். அரசு நிர்வாகத்தில், அவர் இல்லாமல் இருக்கப் போவது, நிச்சயம் எங்களை பாதிக்கும்,'' என்றார்.

தவிர, மூத்த தலைவர்கள் அந்தோணி, மோதிலால் வோரா, தவான், மோஷினா கித்வாய் உள்ளிட்டோரும், பிரணாப் முகர்ஜியை வாழ்த்திப் பேசினர்.

"என்றென்றும் நன்றிக்கடன்':காங்கிரஸ் காரிய கமிட்டியில், இறுதியாக பேசிய பிரணாப், ""நாற்பது ஆண்டுகளாக, காங்கிரசுக்கும் எனக்கும் உறவு உள்ளது. வெவ்வேறு பதவிகள் என, எத்தனையோ பொறுப்புகளை வகித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் எனக்கு அளித்தது, காங்கிரஸ் கட்சியே. இப்போது, ஜனாதிபதி தேர்தலிலும், என்னை கட்சி நிறுத்தியுள்ளது. இதற்கு, என்றென்றும் காங்கிரசுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். இந்திரா, ராஜிவ், சோனியா என, அனைவரது நம்பிக்கையையும் பெற்றது, நான் செய்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்,'' என்றார்.பின், வெளியில் வந்தவுடன் நிருபர்களிடம், ""ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதற்காக, எனக்கு காங்கிரஸ் செய்த பிரிவு உபசார நிகழ்ச்சி இது. நாளை (இன்று), பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, எனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். வரும் 28ம் தேதி (நாளை மறுநாள்), எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக