செவ்வாய், ஜூன் 26, 2012

வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் முஸ்லிம்கள் – பீகார் அமைச்சர் ஷாஹித் அலிகான் குற்றச்சாட்டு !

Bihar's Minority Welfare Minister Shahid Ali Khanபோபால்:தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்களை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்கிறது என்றும், இதற்காகவே அக்கட்சி மதசார்பின்மை வேடம் புனைவதாகவும் பீகார் மாநில அமைச்சர் ஷாஹித் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அகில இந்திய வக்பு வாரிய கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பீகார் மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான ஷாஹித் அலி கான் வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம்
கூறியது:
சுதந்திரத்துக்குப் பின் பல ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சிதான் நாட்டை ஆட்சி செய்துள்ளது. ஆனால் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது. இதற்காகவே மதச்சார்பின்மை வேஷம் போடுகிறது.
நாட்டில் சிறுபான்மையின மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய 2005-ல் சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது. இது நாட்டில் முஸ்லிம்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளார்கள் என்ற உண்மையைத் தோலுரித்துக் காட்டியது. சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் செய்தது ஒன்றுமில்லை என்பதை இது வெளிச்சம்போட்டுக் காட்டியது. ஆனால் அதன் பின்னரும் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. வெறும் பேச்சு மட்டும்தான் இருக்கிறது.
ஐஎஸ்ஐ உளவாளிகள் என்று கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்கின்றனர். எவ்வித விசாரணையும் இன்றி அவர்களை பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலமே இருளடைந்து விடுகிறது. அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். முஸ்லிம் இளைஞர்கள் மீது தவறாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து இந்தத் தொகையை வழங்க வேண்டும்.
உண்மையான முஸ்லிம்கள் எவரும் தனது தாய் மண்ணுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். அப்படி எவராவது செயல்பட்டால் அவர்களை முஸ்லிம் என்றே ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக