வெள்ளி, ஜூன் 22, 2012

மகாராஷ்ட்ரா சட்டசபையில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி !

Fire accident in Maharashtra assembly building
 மகாராஷ்ட்ரா தலைமை செயலகம் அமைந்துள்ள சட்டசபை கட்டிடத்தில் பயங்கர  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலில்  4 வது மாடியில் பரவிய தீ, மளமளவென முதலமைச்சரின் அலுவலகம் அமைந்துள்ள 6 வது தளம் வரை பரவிட்டதாகவும், தீயை அணைக்க 25 க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகளில் வந்து தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீ முதலில் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசை சேர்ந்த அமைச்சர் பாபன்ராவ் பச்புடே அறையிலிருந்துதான் பரவியதாக கூறப்படுகிறது. தீ 6 ஆவது மாடியையும் தாண்டிவிட்ட நிலையில்,அப்பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் கட்டிடத்திலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவசரமாக வெளியேறி உள்ளனர். 

மின்கசிவுதான் இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதர்ஷ் கோப்புகள் சேதம்? 

இதனிடையே இந்த தீ விபத்தில் முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்களது அறைகள் சேதமடைந்து விட்டதாகவும்,ஏராளமான கோப்புகள் தீயில் கருகி சாம்பலாகிவிட்டதாகவும், இதில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு திட்டம் தொடர்பான ஆவணங்களும் இடம்பெற்றிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஆதர்ஷ் கோப்புகளின் நகல்கள்  பத்திரமாக இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தீ விபத்து நடந்த சமயம் முதலமைச்சர் பிருத்விராஜ் சவாண் அவரது அறையில் இல்லாததால் அவர் தீ விபத்திலிருந்து தப்பினார்.
பலர் காயம்:
இந்த தீ விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தீ விபத்தை தொடர்ந்து 4,5 மற்றும் 6 வது மாடியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வர முயன்றும், தீயின் வெப்பத்தால் அவர்கள் கட்டிடத்தின் மேலிருந்து குதிக்க முயன்ற நிலையில், தப்பிக்க இயலாதவர்கள் கட்டிடத்தின் உச்சிக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்புக் குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தீயை அணைக்க 25 க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் போராடி வருகிற நிலையில்,இந்திய கடற்படை வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் களம் இறக்கிவிடப்பட்டுள்ளனர்
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மும்பை காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக