வியாழன், ஜூன் 28, 2012

விருத்த சேதனம் சட்டவிரோதம்: ஜெர்மன் நீதிமன்றம் !

பெர்லின்:சிறுவர்களுக்கு மத சட்டத்தின் படி நடத்தப்படும் விருத்த சேதனம் சட்டவிரோதம் என்று ஜெர்மனியில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முஸ்லிம்களும், யூதர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேற்கு ஜெர்மனியில் கோலோங் உள்ளூர் நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்துள்ளது. ஒருவருக்கு தனது உடலின் பூரணத்துவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை உண்டு. விருத்த சேதனம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர் முதிர்ச்சி அடைந்த பின் தீர்மானிக்கட்டும்
என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளையில் சுகாதார காரணங்களால் நடத்தப்படும் விருத்தசேதனம் சட்டவிரோதம் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நான்கு வயதான சிறுவனுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திற்கு தெரியவந்தது. சிறுவன் ஒருவருக்கு விருத்தசேதனம் செய்ததில் ஏற்பட்ட தவறால் இரத்தம் அதிகளவு வெளியாகி அவனை மருத்துவமனைக்கு பெற்றோர் சிகிட்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனை விவாதமாகியது. சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்கள் மீது க்ரிமினல் குற்றத்தை பதிவுச்செய்தனர். ஆனால், நீதிமன்றம் டாக்டர்களை விடுவித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஜெர்மனியில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறுவர்களுக்கு விருத்த சேதனம் செய்வது சுகாதார ரீதியான பாதுகாப்பை அளிக்கும் என்பது மருத்துவ ஆய்வின் உறுதியான முடிவாகும். முஸ்லிம்களும், யூதர்களும் தங்களது ஆண் பிள்ளைகளுக்கு விருத்த சேதனம் செய்வதை மத வழக்கமாக கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக