புதன், ஜூன் 20, 2012

பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியல். சச்சினை பின்னுக்கு தள்ளிய தோனி !

உலகளவில் பெரும் பணக்கார விளையாட்டு வீரர், வீராங்கனைகள் குறித்த பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் சச்சினை விட பெரிய பணக்காரர் டோணி என குறிப்பிடப்பட்டுள்ளது.சச்சினை மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஓட்டப் பந்தய வீரரும், 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ளவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான உசேன் போல்ட், டென்னிஸ் ஸ்டார் நவோக் ஜோகோவிக், கால்பந்து ஸ்டார்கள் வேயன் ரூனி, பெர்னாண்டோ டோரஸ் ஆகியோரையும் கூட 'சொத்துக் குவிப்பில்' பின்னுக்குத்
தள்ளியுள்ளார் டோணி.
பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில், டோணிக்கு 31வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் பிளாய்ட் மேவேதர்.
சச்சின் 78வது இடத்தில் இருக்கிறார். ஜோகோவிக் 62வது இடத்திலும், உசேன் போல்ட் 63வது இடத்தில் இருக்கிறார்.
முதலிடத்தில் உள்ள மேவெதரின் சம்பாத்தியம் 85 மில்லியன் டாலராகும். கடந்த 11 வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர் கோல்ப் சாம்பியன் டைகர் உட்ஸ்தான். தற்போது அவர் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார். அவர் தற்போது 3வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 59.4 மில்லியன் டாலராகும்.
டோணியின் சம்பாத்தியம் 26.5 மில்லியனாகும். இது போக விளம்பரங்கள் மூலம் இவர் தனியாக 23 மில்லியன் டாலரை அள்ளுகிறாராம். டெண்டுல்கரின் சம்பாத்தியம் 18.6 மில்லியன் டாலராகும். விளம்ரபர வருவாய் 16.5 மில்லியன் டாலராகும்.
விளம்பர வருவாய் மூலம் சம்பாதிப்பதில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியைக் கூட பின்னுக்குத் தள்ளியுள்ளார் டோணி. பணக்கார வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. இவரது சம்பாத்தியம் 39 மில்லியன் டாலராகும். விளம்பரங்கள் மூலம் இவர் 19 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.
வீராங்கனைகளில் ஷரபோவா முதலிடம்
பெண்கள் வரிசையில் டென்னிஸ் தாரகை மரியா ஷரபோவா முதலிடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 27.9 மில்லியன் டாலராகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக