வியாழன், ஜூன் 21, 2012

கூட்டுப்படுகொலை தொடரும் – இலங்கை அமைச்சரின் திமிர் பேச்சு குறித்து பிரதமருக்கு கருணாநிதி கடிதம் !

Champika RanawakaSri Lankan Ministerசென்னை:ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதுக்குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு
ஃபேக்ஸ் மூலம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, “சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்” என்று சம்பிக ரணவக்க பேசியுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பழையில் நேற்று காலை நடந்த நிலமீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதலும் நடத்தியுள்ளது.
அமைச்சரின் பேச்சு, இலங்கையில் எத்தகைய சூழலில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் சிங்கள இனவாதத்தின் உச்சமாகவும் கருதப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு தமிழ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதமும் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், ’நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற வைப்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.
அவரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டு சென்று இதுபோன்று பேசுவதைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் தமிழர்கள் விஷயத்தில் இலங்கை எத்தகைய கடுமையான நிலையை எடுத்துள்ளது என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பார்வைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழர் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும்’ என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்காவின் பேச்சைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாளவன் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக