வியாழன், ஜூன் 21, 2012

எக்வடாரில் தஞ்சம் கோரும் அசாஞ்ச் கைது செய்யப்படலாம் !

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச் தென் அமெரிக்க நாடான எக்வடோரிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில், அவர் பிணை விதிகளை மீறியுள்ளதால் கைது செய்யப்படலாம் என்று பிரிட்டிஷ் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இரவு 10 மணிமுதல் காலை 8 மணிவரை பிணையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில்தான் ஜூலியன் அசாஞ்ச் தங்கியிருக்க வேண்டும் என்று பிணை விதி இருக்கின்ற நிலையில், அவர்
நேற்றைய இரவை லண்டனிலுள்ள எக்வடார் தூதரகத்தில் கழித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படும் தீர்மானத்தை எதிர்த்து மீண்டும் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஸ்வீடனில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார் என்று அசாஞ்ச் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் மறுக்கிறார்.
அசாஞ்சின் தஞ்சக் கோரிக்கை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக எக்வடார் அரசு கூறியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண தாம் எக்வடோர் அரசுடன் பேசவிருப்பதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் ராஜாங்க தகவல் பரிமாற்றங்களை இணையதளத்தில் கசியவிட்டதாலேயே தான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாகவும், ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால் தான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் அசாஞ்ச் கருதுகிறார்.
ஜூலியன் அசாஞ்சின் விக்கிலீக்ஸ் இணையதளம், கசியவிட்ட அமெரிக்காவின் ராஜாங்க தகவல்கள் அமெரிக்காவையும் சர்வதேச நாடுகளையும் இன்னும் பல சர்வதேச நிறுவனங்களையும் பெரும் தர்மசங்கடத்தில் தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக