சனி, ஜூன் 30, 2012

எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 10 ராஜினாமா !

10 Karnataka ministers to resignபெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் அரசியல் நெருக்கடியும், அதிகாரப் போட்டியும் தீவிரமடைந்து பா.ஜ.க அரசின் 10 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமாச் செய்துள்ளனர்.தலைமையை மாற்றக்கோரும் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை ஆதரிக்கும் எட்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமாச் செய்துள்ளனர். ராஜினாமா
கடிதத்தை முதல்வர் சதானந்த கவுடாவிடம் அவர்கள் அளித்தனர். கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கிராம வளர்ச்சித்துறை-பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஜகதீஷ் ஷெட்டாரை முதல்வாக்க வேண்டும் என கோரி ஊழல் வழக்கில் முதல்வர் நாற்காலியை இழந்த எடியூரப்பா கலகக்கொடியை உயர்த்தினார்.
மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண கூடுதல் கால அவகாசம் தேவை என்று பா.ஜ.க மேலிடம் கோரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து தனது ஆதரவு அமைச்சர்களை ராஜினாமாச் செய்யவைத்து மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார் எடியூரப்பா.
ஜகதீஷ் ஷெட்டார், சி.எம்.உதாஸி, பஸவராஜ் பொம்மை, உமேஷ் கட்டி, எம்.பி.ரேணுகாச்சார்யா, வி.சோமண்ணா, முருகேஷ் நிரானி, ஷோபா கரந்தலஜா, ஆர்.என்.பெல்மாகி ஆகியோர் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.
ராஜு கவுடா இன்று தனது பதவியை ராஜினாமாச் செய்வார் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
10 அமைச்சர்கள் நேற்று(வெள்ளிக் கிழமை) ராஜினாமச் செய்யப்போவதாக எடியூரப்பா ஆதரவாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர். மதியம் ஜகதீஷ் ஷெட்டாரின் வீட்டில் வைத்து எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் கூடி எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
முதல்வர் பதவிக்காக பா.ஜ.க கர்நாடகா மாநில தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் வலுவாக அழுத்தம் கொடுத்து வருகிறார். தனக்கு ஆதரவாக ஏராளமான எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், முதல்வர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாகவும் கடந்த வாரம் ஈஸ்வரப்பா வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக