வியாழன், ஜூன் 28, 2012

கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அவமானத்தால் தலைமறைவு !

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள, அபராதம் செலுத்தாத காரணத்தால், ஏழாவது மாதத்தில், சீன அதிகாரிகளால் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்ட இளம் பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.
சீனாவில், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது. மீறி, பெற்றுக் கொண்டால், கடும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதன் மூலம், சீனாவில் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஷான்சி மாகாணத்தை சேர்ந்தவர், பெங் ஜியாமி, 23.
முதல் குழந்தை உள்ள நிலையில், இந்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை உருவானது.
இதை கேள்விப்பட்ட சுகாதார மைய அதிகாரிகள், அவரை அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டும் என வற்புறுத்தினர். பெங்கின் கணவர் டெங் ஜியுவான். இரண்டாவது குழந்தைக்கு ஆசைப்பட்ட டெங், அபராதம் கட்ட முயற்சித்தார். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள, 3.5 லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். உரிய காலத்தில் அவர் இந்த அபராதத்தை கட்டாத காரணத்தால், கடந்த 2ம் தேதி, உள்ளுர் சுகாதார அதிகாரிகள், பெங்கை, வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு பிரசவ ஊசி போட்டு, ஏழு மாத சிசுவை வெளியே எடுத்தனர். சிசு வெளியே வந்ததும், அதன் தலையில் ஊசி போட்டு கொன்று விட்டனர். இந்த சம்பவத்தை கண்டு பெங் கதறி அழுதார். மனித உரிமை இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நிலைமை வெளியுலகுக்குத் தெரிந்ததால், கட்டாய கருக்கலைப்புக்கு காரணமான, மூன்று அதிகாரிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கட்டாய கருத்தடை சம்பவம் சாதாரண விஷயம். இதை வலைதளத்தில் வெளியிட்ட, பெங் ஜியாமி குடும்பத்தினர், தேச துரோகிகள், என அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறி வருகின்றனர். ஜியாமி குடும்பத்தினருக்கு எதிராக பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பெங் ஜியாமி குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனர். அப்பகுதி மக்களின் தொல்லை தாளாமல், ஜியாமியின் கணவர் டெங் ஜியுவான் தலைமறைவாகியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக