திங்கள், ஜூன் 25, 2012

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை !

Jiaolong dives record 7000m deep. கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர்.கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. 
கடலின் அதிக ஆழம் செல்வதற்கு சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. "ஜியாவ்லாங்' என்ற நீர்மூழ்கி கப்பல் 3,759 மீட்டர் ஆழம் வரை செல்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு 17 முறை சீன கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. இதற்கிடையே கடந்த 15ம் தேதி, பசிபிக் கடலின் மேற்கு பகுதியில் ஜியாவ்லாங் நீர்மூழ்கி கப்பலில் மூன்று சீன வீரர்கள், 7 ஆயிரத்து 15 மீட்டர் ஆழம் வரை சென்று சாதனை படைத்துள்ளனர்."டைட்டானிக்' திரைப்படத்தை தயாரித்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், 11 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை சிறிய நீர்மூழ்கி கப்பலில் சென்று ஏற்கனவே, சாதனை படைத்துள்ளார்.

மற்றொரு சாதனை:விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. வரும், 2020க்குள், இந்த பணிகளை முடிக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்துக்கு, "டியான்காங்' என பெயரிடப்பட்டுள்ளது.

ஆய்வு மையம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக, "ஷென்சு-9' என்ற விண்கலத்தை, சீனா, கடந்த வாரம் விண்ணில் செலுத்தியது. இதில், முதன் முறையாக, விண்வெளி வீரர்களுடன்,லியூ யாங்,34, என்ற பெண்ணும் சென்றுள் ளார்.

ஷென்சு விண்கலம், டியான்காங் விண்வெளி நிலையத்துடன் தானியங்கி முறையில் இணைந்தது. தானியங்கி முறையில் அல்லாது இந்த வீரர்களின் முயற்சியால் விண்கலத்தை, விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் முயற்சி நேற்று பரி சோதனை ரீதியாக பார்க்கப்பட்டது. இதில், மூன்று வீரர்கள் வெற்றிகரமாக விண்கலத்தை, விண்வெளி நிலையத்துடன் 10 நிமிடத்தில் இணைத்து சாதனை படைத்தனர்.கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்தில் இருந்த மூன்று வீரர்களும், விண்வெளியில் விண்கலத்தை இணைத்த மூன்று வீரர்களும் இ-மெயில் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக