கடந்த 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் அதிக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது, தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது மற்றும் கல்வித் துறையில் அதிக வளர்ச்சி காணப்படுகிறது என்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கூற்றை அவரது அமைச்சரவையின் முன்னாள் சகாவும் மகாகுஜராத் ஜனதா கட்சியின் தலைவருமான கோர்தன் ஜடாஃபியா முட்டாள்தனமானது என்று மறுத்துள்ளார்மோடியின் தலைமையில் குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒரு போலித் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 39.60 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
பெறப்பட்டுள்ள உண்மையான புள்ளிவிவரங்கள் வெளிநாட்டு முதலீடு 1.85 இலட்சம் கோடிகள் மட்டும்தான் எனத் தெளிவுபடுத்தியுள்ளன. இது உத்தேசத் தொகையில் 4.68 சதவீதம் மட்டுமே என்று கோர்தன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.17,701 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 1,907 திட்டங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கோர்தன் ஜடாஃபியா, குஜராத் கலவரத்திற்குப் பின் அமைச்சரவையிலிருந்தும் பாஜகவிலிருந்தும் விலகி, மகாகுஜராத் ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தது. ஆனால் நவம்பர் 30, 2011 வரை 2,98,714 வேலை வாய்ப்புகளையே அரசு உருவாக்கியது என்றும் அவர் கூறினார்.
தற்போது இந்தியாவிலேயே அதிக வளர்ச்சியுறும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் கேசுபாய் பட்டேல் தலைமையிலான ஆட்சியின் போது குஜராத் இரண்டாவது இடத்தில் இருந்தது. தொழில்களைத் தொடங்கி நடத்தி வருவது என்பது குஜராத் மக்களின் தொன்றுதொட்டு வரும் பக்கமாகும். மோடி ஆட்சியில் இருப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இன்றுவரை ஆர்.எஸ்.எஸ். கொள்கையுடையவரான ஜடாஃபியா, இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலின் போது 182 தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
நானும் எனது கட்சித் தொண்டர்களும் ஆர்.எஸ்.எஸின் கூட்டங்களுக்குச் சென்று வருகிறோம். பாஜக தனது கொள்கையையே இன்னும் முடிவு செய்யவில்லை. அது சந்தர்ப்பவாதக் கட்சி. மகாகுஜராத் ஜனதா கட்சிதான் (பாஜகவின் தோற்றுவிப்பாளராக) தீன்தயாளன் கூறும் உண்மையான பாஜக என்றும் ஜடாஃபி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக