திங்கள், மே 07, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்கள் வாக்காளர் அட்டைகளை திருப்பி ஒப்படைக்க முடிவு

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு வந்த நடவடிக்கையும் எடுக்காததால் கூடங்குளம் போராட்டக்காரர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பி ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
 
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறாததை கண்டித்தும், கூடங்குளம் பகுதியில் கடலியல், நீரியல், நிலத்தியல் ஆய்வுகள் மேற்கொள்ளக்கோரியும், கூடங்குளம் பகுதி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் அணு உலை எதிர்ப்பாளர்கள், இடிந்தகரையில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 1-ந்தேதி தொடங்கினார்கள்.
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் இடிந்த கரையில்தான், இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 25 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவந்தனர். இந்நிலையில் அவர்களது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 351 பெண்கள் கலந்து கொண்டனர்.
 
அவர்கள் நேற்று முன்தினம் (4-ந்தேதி) முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் 4-ந்தேதி முதல் 376 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்களில் பலர் நேற்று முன்தினம் (5-ந்தேதி) சோர்வடைந்தனர். இதனால் அவர்களுக்கு அரசு மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 3 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
 
பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்திற்கு திரும்பிவந்தனர். நேற்று 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 351 பெண்கள் உள்பட 376 பேரும் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களில் 19 பெண்கள் உள்பட 20 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்கள் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பிறது அவர்கள் அனைவரும் உண்ணாவிரத பந்தலுக்கு திரும்பி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக்காரர்கள் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்கள். அதில் காலவரையற்ற போராட்டம் நடத்திவரும் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திங்கட்கிழமை (அதாவது இன்று) மாலைக்குள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பி ஒப்படைப்பது என முடிவு செய்தனர். அதன்படி கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குளி பகுதி மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் நாளை (8-ந்தேதி) திருப்பி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
 
போராட்டக்காரர்களின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 7-வது நாளாக நடந்துவருகிறது. நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் 3பேரை உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து விலகிவிட்டனர். ஆகையால் அவர்களை தவிர மற்ற 373 பேரும் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக