புது டெல்லி:கறுப்புப் பணத்தின் 40 சதவீதம் ரியல் எஸ்டே துறையில் புழங்குவதாக இந்தியாவின் முக்கிய உளவு அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளன.
அண்மையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் இத்தகவல்களை மத்திய வருவாய் அமலாக்க பிரிவு, வருமான வரித்துறை உளவுப்பிரிவு, பொருளாதார உளவுப்பிரிவு ஆகியன தெரிவித்துள்ளன.
2011-ம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த கறுப்புப் பணத்தில் 40% ரியல் எஸ்டேட் துறைக்கு உரியவை என்று தெரிவித்தன. அடுத்தபடியாக தொழில் உற்பத்தித் துறைகளில் (மேனுபேக்சரிங்) 27% அளவுக்கு கறுப்புப் பணம் இருந்தது என்றன.
ரியல் எஸ்டேட் துறையில் புழக்கத்தில் இருந்த தொகையின் அளவு சுமார் ரூ.1,400 கோடி என்றும் மேனுபேக்சரிங் துறையில் ரூ.1,100 கோடி என்றும் அவை குறிப்பிட்டன.
கறுப்புப் பணம் திரள்வது எப்படி?
ரொக்கப் பரிமாற்றத்தை தெரிவிக்காமலேயே மறைப்பது, பல்வேறு அடுக்குகளில் பணப் பரிமாற்றம் செய்வது, வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறுவது, வரிச் சலுகை பெற்றுள்ள நாடுகள் மூலம் பணத்தை வரவழைப்பது, லாபத்தைக் குறைத்துக் காட்டுவது ஆகிய வழிகளில் கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட், மேனுபேக்சரிங் தவிர சுகாதார சேவைகள் (மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைகள்), வெளிநாட்டுச் செலாவணி மாற்று சேவைப் பிரிவுகள், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் மூலமும் பெருமளவு கறுப்புப் பணம் உருவாகிறது என்று உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் துறைகள் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துகின்றன, தங்களுடைய வியாபாரம் மூலம் மேலும் கறுப்புப் பணத்தைப் பெருக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்துறை, வர்த்தகத்துறை குறித்து இந்த அமைப்புகள் அதிகம் குறிப்பிடாவிட்டாலும் அந்தத் துறைகள் மூலமும் கறுப்புப் பண புழக்கம் அதிகரித்து வருவதை அரசு உணர்ந்தே இருக்கிறது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் குறிபிடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக