மும்பை:பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பை நிழலுக தாதா சோட்டா ஷக்கீலை கைது செய்து பிரபலமானவர் ஷம்ஷேர்கான் பதான். இவர் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி கடந்த திங்கள் கிழமை ஓய்வுப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இவர் தலைமையில் அவாமி விகாஸ் பார்டி(AVP) என்றதொரு கட்சி துவக்கப்பட்டுள்ளது.
பதான் மேலும் கூறுகையில், “ஆதிக்க சக்திகள் இவ்விரு சமூகங்களையும் அடக்கி ஒடுக்குகின்றனர். 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து முஸ்லிம்களும், தலித்துகளும் வாக்கு வங்கிகளாகவே பயன்படுத்தப்படுகின்றனர்.
இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களும், தலித்துகளும் 40 சதவீதம் உள்ளனர். இன்று நாட்டை ஆளுபவர்கள் 30-25 சதவீத வாக்குகளைத்தான் பெற்றுள்ளனர். இந்நிலையில் இவ்விரு சமூகங்களும் இணைந்தால் பெரும்பான்மையை பெற முடியும். இது நமது வேளை. நாம் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு செயல்பட்டால் நமது நோக்கத்தை அடையலாம்.” என்று குறிப்பிட்டார்.
தலித் தலைவர் பாபன் காம்ப்ளே இக்கட்சியின் துணைத் தலைவர் ஆவார். தலித்துகளும், முஸ்லிம்களும் இணைந்தால் அவர்கள் கிங் மேக்கர்கள்(ஆட்சியை நிர்ணயிப்பவர்கள்) அல்லர். மாறாக கிங்காக(ஆட்சியாளர்களாக) மாறுவார்கள் என்று காம்ப்ளே கூறினார். ஏதேனும் தீவிரவாத செயல்கள் நடந்தால் முஸ்லிம் இளைஞர்கள் குறிவைத்து பிடிக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு நீதியான விசாரணை கிடைப்பதில்லை என்று காம்ப்ளே குறிப்பிட்டார். இக்கட்சி 80 சதவீத சேவைகளையும், 20 சதவீத அரசியலையும் புரியும் என்றும், இந்தியா முழுவதும் இக்கட்சியின் கிளைகளை துவக்கி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இரு தலைவர்களும் கூறினர்.
மும்பை சியான் பகுதியில் உள்ள சண்முகநந்தா ஹாலில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடந்த கட்சியின் துவக்க விழா நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், தலித்துகளும் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக