சனி, மே 12, 2012

பாண்டியாவை பின்தொடர ஐ.பிக்கு உத்தரவிட்ட மோடி அரசு! – எஸ்.ஐ.டி!

புதுடெல்லி:மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்ட குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவை ரகசியமாக கண்காணிக்க மோடி அரசு மாநில இண்டலிஜன்ஸ் பீரோவுக்கு உத்தரவிட்டது என்று சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) கூறுகிறது. குஜராத் இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி, சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்ட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப் படுகொலையை தொடர்ந்து உருவாக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயம் முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்க பாண்டியா தயாரானதற்கு பிறகு அவரை பின்தொடர அரசு ஐ.பிக்கு உத்தரவிட்டது.
மக்கள் தீர்ப்பாயம் முன்பாக ஆஜரான ஒரு அமைச்சருக்கு எதிராக ரகசிய விசாரணை நடத்தியதை ஐ.பி ஒப்புக்கொண்டுள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த அமைச்சர் ஹரேன் பாண்டியா என்பது தெரியவந்ததாக எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறுகிறது.
நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டியா உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து 2003 மார்ச் மாதம் கொலைச் செய்யப்பட்டார். பாண்டியாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
முஸ்லிம் இனப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று மோடி உத்தரவிட்டதாக பாண்டியா மக்கள் தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தார் என்று தீர்ப்பாய உறுப்பினரான நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ் கூறுகிறார்.
முஸ்லிம் இனப்படுகொலை துவங்கிய உடன் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த உயர்மட்ட கூட்டத்தில் மோடி போலீசாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார். அதேவேளையில் பாண்டியாவின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள எஸ்.ஐ.டி தயாரில்லை. மோடியின் வீட்டில் நடந்த உயர்மட்ட கூட்டம் சட்டம்-ஒழுங்கை குறித்து விவாதிக்க நடந்த கூட்டம் என்றும், அதில் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்றும் எஸ்.ஐ.டி கூறுகிறது. அவ்வேளையில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்த பாண்டியாவின் வாக்குமூலத்தை நம்பிக்கைக்கு உரியதாக ஏற்றுக்கொள்ள இயலாது என்பது மாநில உயர் அதிகாரிகளின் விளக்கங்களில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது என்று எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக