ஞாயிறு, மே 13, 2012

துரோகி விவகாரம்:வி.எஸ்.அச்சுதானந்தன் – பிணராய் விஜயன் மோதல் முற்றுகிறது!

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களிடையிலான மோதல் வலுவடைந்துள்ளது. முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் மற்றும் கட்சியின் மாநில செயலாளர் பிணராய் விஜயன் இடையிலான மோதல் வலுவடைந்துள்ளது.
சமீபத்தில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டர் டி.பி. சந்திரசேகரன் கொலை தொடர்பாக இருவரிடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி பிரிவுபட்டபிறகும், கட்சியில் துரோகிகள் இருக்கின்றனர் என்று பிணராய் விஜயன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் மாநில செயலரின் அணுகுமுறை சர்வாதிகாரி போல உள்ளது. 1964-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்படுவதற்குக் காரணமான எஸ்.ஏ. டாங்கே மேற்கொண்ட அணுகுமுறையைப் போல பிணராய் விஜயனின் போக்கும், நடவடிக்கையும் உள்ளது என்று அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது தேசிய கவுன்சிலில் இடம்பெற்றிருந்த 30 பேரில் தானும் ஒருவன் என்று குறிப்பிட்ட அவர், அன்றிலிருந்து இன்று வரை கட்சியில் மாற்றம் கொண்டு வரப் போராடியதோடு, கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் தங்களை துரோகிகள் என டாங்கே அப்போது பட்டம் கட்டினார். அப்போது எத்தகைய அணுகுமுறையை டாங்கே கடைப்பிடித்தாரோ அதேபோலத்தான் விஜயனும் செயல்படுகிறார் என்று அச்சுதானந்தன் கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சியானது காங்கிரஸ் கட்சியைப் போல அல்ல. கட்சியின் தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளையும் கீழ்நிலைத் தொண்டர் வரை திணிக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் அனைத்து முடிவுகளுமே அதைச் செயல்படுத்துவதற்கு முன்பு விரிவாக விவாதிக்கப்பட்டு அதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் ஆராயப்படும். சந்திரசேகரனை துரோகி என்றும், கட்சி விரோதி என்றும் விஜயன் குறிப்பிட்டது அவரது சொந்தக் கருத்து. அது கட்சியின் கருத்தல்ல என்று அச்சுதானந்தன் கூறினார்.
பல்வேறு காரணங்களால் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை சமாதானப்படுத்தி அவர்களை மீண்டும் கட்சிக்குத் தொண்டாற்ற வைப்பதுதான் கட்சியின் கொள்கை. கருத்து ரீதியில், கொள்கை ரீதியில் மாறுபாடு இருந்தாலும் அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தான் கட்சியின் தலைமைக்கு எதிராக கூறும் கருத்துகள் கட்சியின் விதிகளை மீறிய நடவடிக்கையாக அமையாது என்றும் அச்சுதானந்தன் கூறினார்.
விஜயனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூறியதற்காக கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சுதானந்தன் நீக்கப்பட்டார். இப்போது உருவாகியுள்ள பிரச்னையை கட்சித் தலைமை விரிவாக ஆராய்ந்து நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவதாக அச்சுதானந்தன் தெரிவித்தார்.
ஒரு வாரத்தில் கட்சியின் செயலர் விஜயன் குறித்து இரண்டாவது முறையாகக் குறை கூறி விமர்சித்துள்ளார் அச்சுதானந்தன். கொலை செய்யப்பட்ட சந்திரசேகரன், கம்யூனிஸ்ட் கட்சியில் ஒஞ்சியம் பகுதியில் மிகவும் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர். அச்சுதானந்தனின் தீவிர ஆதரவாளர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியில் (ஆர்எம்பி) இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்த போதிலும் அச்சுதானந்தனின் ஆதரவாளராகவே இருந்தார். இந்த விஷயம் குறித்து கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இப்போதைக்கு கருத்து எதையும் கூற முபடியாது என்றார்.
இது குறித்து உரிய நேரத்தில் பேசி தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார். பிரச்னை ஏதேனும் இருப்பதாகக் கருதினால் அதுகுறித்து பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிப்போம்  என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக