ஞாயிறு, மே 13, 2012

மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்.ஐ.டியின் நடவடிக்கை தவறு: நீதிபதி பி.பி.சாவந்த்!

புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வழக்கில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வு குழுவின்(எஸ்.ஐ.டி) அறிக்கைக்கு குஜராத் இனப்படுகொலை வழக்கை முன்னர் விசாரித்த நீதிபதி பி.பி.சாவந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு தேசிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதனை பி.பி.சாவந்த் கூறியுள்ளார்.

மோடி குற்றவாளி என்றும், அவரை விசாரணை செய்யவேண்டும் என்றும் பி.பி.சாவந்த் முன்னர் தனது அறிக்கையில் சிபாரிசு செய்திருந்தார். இனப் படுகொலையில் நரேந்திர மோடிக்கு பங்கில்லை என்றும், அவர் மீது வழக்கு தொடர ஆதாரங்கள் இல்லை என்றும் அண்மையில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் கூறியிருந்தது. இது முற்றிலும் தவறு என்று பி.பி.சாவந்த் கூறுகிறார்.
மோடி குற்றவாளி என கூறும் எனது அறிக்கையையும், எஸ்.ஐ.டியின் அறிக்கையையும் மக்கள் மதிப்பீடு செய்யட்டும். உச்சநீதிமன்றம்தான் எஸ்.ஐ.டியை நியமித்தது. இனப் படுகொலையில் மோடிக்கு பங்கிருக்கிறதா? என்பதை ஆராய நீதிமன்றம் அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. இவருடைய அறிக்கையும் எஸ்.ஐ.டியின் அறிக்கை எதிரானதாகும்.
கோத்ராவில் ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பழிவாங்க ஹிந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் போலீஸ் தலையிடக்கூடாது என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் மோடி கூறியதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அளித்துள்ள வாக்குமூலம் முக்கியமானதாகும். அதனை எஸ்.ஐ.டி பொருட்டாக கருதவில்லை என்று சாவந்த் கூறுகிறார்.
அதிகாரிகளை அழைத்து ஒரு அறையில் வைத்து கூட்டம் நடத்தி அதில் கோத்ராவில் கரசேவகர்களை கொலைச் செய்ததற்கு பழிவாங்க செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மோடி கூறியிருந்தால் கூட அதன் மூலம் ஒரு குற்றம் உருவாகாது என்பது எஸ்.ஐ.டியின் நிலைப்பாடாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக