புதன், மே 16, 2012

மூடி மறைக்கப்பட்ட எய்ம்ஸ் முன்னாள் இயக்குநருக்கு எதிரான தேசிய கமிஷன் அறிக்கை!

புதுடெல்லி:ஆல் இந்தியா இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸில்(எய்ம்ஸ்) ஜாதி ரீதியான பாரபட்சத்தையும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தையும் ஊக்கமளித்த முன்னாள் இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கையை சிபாரிசுச் செய்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான தேசிய கமிஷனின் அறிக்கையை அதிகாரிகள் பல ஆண்டுகளாக மூடி மறைத்துள்ளனர்.

முன்னாள் இயக்குநர் டாக்டர் வி.வேணுகோபாலுக்கு எய்ம்ஸில் ஜாதி பாரபட்ச நடவடிக்கைகளில் முக்கிய பங்கிருப்பதாக 2008-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வேணுகோபாலின் பெயரை குறிப்பிடும் அறிக்கை, அவர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சிபாரிசு செய்கிறது. ஆனால், எய்ம்ஸ் கவர்னிங் போர்டு(கட்டுப்பாட்டு வாரியம்) இந்த அறிக்கையை காரணம் எதுவும் இல்லாமல் புறக்கணித்ததோடு பல ஆண்டுகளாக மூடி மறைத்துள்ளது.
ஜனவரி 16-ஆம் தேதி கூடிய கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் அறிக்கை பரிசீலிக்கப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எய்ம்ஸை விட்டு வெளியேறிவிட்டதால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என கூறியது.
ஏற்கனவே எய்ம்ஸில் நிலவிய கடுமையான ஜாதி பாகுபாட்டைக் குறித்து விசாரணை நடத்திய தொராட் கமிஷன், குற்றவாளிகள் என கண்டறிந்த அனைவரையும் தண்டிக்கவேண்டும் என சிபாரிசுச் செய்தது.
எய்ம்ஸில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தை ஊக்குவித்த வேணுகோபாலும், இதர அதிகாரிகளும் தேர்வு நடத்துவதிலும் கடுமையான ஜாதி பாகுபாடான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மீது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வன்முறைகள் தடுப்புச்சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவுச்செய்ய வேண்டும் என கமிஷன் சிபாரிசுச் செய்தது.
இடஒதுக்கீட்டுச் சட்டங்களை சீர்குலைக்க உதவியவர்களுக்கும், இடஒதுக்கீட்டிற்கான உரிமைகளை கொண்ட பிரிவினருக்கு அவர்களின் உரிமைகளை தடுப்பதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டியவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள கமிஷன் பரிந்துரைச் செய்தது. ஆனால் இதனை அதிகாரிகள் புறக்கணித்தனர்.
இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெறும் பிரிவைச் சார்ந்த டாக்டர்கள் மற்றும் மாணவர்களிடம் ரேடியோ தெரப்பி பிரிவைச் சார்ந்த டாக்டர்.ஜி.கே.ரத் கொடூரமான ஜாதி பாகுபாட்டைக் காட்டினார் என கமிஷன் அவரது பெயரைக் குறிப்பிட்டே குற்றம் சாட்டியது.
டாக்டர்.ரத்தை அனைத்து பதவிகளில் இருந்து நீக்கவேண்டும் என்றும் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள அவரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றும் சிபாரிசுச் செய்யப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர் ஒருவர் ஹாஸ்டல் அறையில் தற்கொலைச் செய்ததைத் தொடர்ந்து எய்ம்ஸில் மீண்டும் ஜாதி பாகுபாடி தலைதூக்கியது வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக