மூன்று மாத சிறை வாசத்தை அனுபவித்து விட்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர் திவாகரனும் நடராஜனும்!
திவாகரன் மீது உள்ள ஐந்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட, கடந்த 4-ம் தேதியன்று உளவுப்பிரிவு போலீஸ் பாதுகாப்பு டன் திருச்சி சிறையின் பின்வாசல் வழியே கிளம்பி மன்னார்குடிக்குச் சென்றார். திவாகரன் வருகைக்காக திருச்சி சிறைவாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த
செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும், அவர் கிளம்பிச் சென்ற தகவலை ஒருமணி நேரம் கழித்தே அறிய முடிந்தது.
அடுத்து, நடராஜன் மீது போடப்பட்ட ஆறு வழக்குகளிலும் அவருக்கு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்து விட, 11-ம் தேதி இரவு 7.35 மணிக்கு திருச்சி சிறையைவிட்டு வெளியே வந்தார். நடராஜன் மீது பாய்ச்சுவதற்காக மேலும் இரண்டு புகார்களைத் தயார் நிலையில் வைத்து இருந்தது தஞ்சை போலீஸ். ஆனால், மேலிட சிக்னல் காரணமாக, அந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.சசிகலா மீண்டும் போயஸ்வாசியாக மாறியதுமே, சிறைக்குள் காட்சிகள் மாற ஆரம்பித்தன. ''நடராஜன் படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து வரவழைத்துத் தரப் பட்டன. தூங்குவதற்கு மெத்தையும், தலையணையும் கொடுக்கப்பட்டன. வெயில் கொடுமையைத் தணிக்க ஏர்கூலர் வழங்கப்பட்டது. சமையலில் கெட்டிக்காரர்களான தண்டனைக் கைதிகளைத் தேர்வு செய்து, ருசியான தரமான உணவு சமைத்து வழங்கப்பட்டது'' என்கிறார்கள் சிறை ஊழியர் கள்.
சிறையில் இருந்து வெளியே வந்த நடராஜன், அங்கே காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசவில்லை. சென்னைக்குப் போவதாக போலீஸிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி விர்ரென்று வெளியே சென்றார். நேராக, திருச்சி சுந்தர் நகரில் உள்ள அவரது ஒன்று விட்ட சகோதரரும் ரிட்டயர்டு பி.ஆர்.ஓ-வுவான பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்றார். அங்கே, வீட்டு மாடியில் வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். இந்த விவரம் மிகவும் தாமதமாகவே உளவுத்துறை போலீஸுக்குத் தெரிய வந்தது.
இரவு 8.30 மணியில் இருந்து 9.15 வரை செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், ஜெயலலிதா மீதும் அரசு உயர் அதிகாரிகள் மீதும் கோபத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்.
''ஜெயலலிதாவுக்காக அரசு வேலையை உதறி விட்டு, அவரது வளர்ச்சிக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தவன் நான். எனக்கு, 83 நாட்கள் சிறைவாசத்தைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். கருணாநிதிகூட என்னை 30 நாட்களுக்குத்தான் சிறையில் அடைத்தார். ஜெயலலிதா அவரையும் மிஞ்சி விட்டார். மறைமுக அரசியலில் ஈடுபட்டிருந்த என்னைச் சிறைக்கு அனுப்பியதன் மூலம், நேரடி அரசியலில் இறங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டார் ஜெயலலிதா.
இந்தத் தேர்தல் வரை அ.தி.மு.க.வுக்காக 'தேர்தல் அறிக்கை’ உட்பட ஜெயலலிதாவுக்காக அறிக்கை தயாரித்தது நான்தான். அதை எந்த அ.தி.மு.க-காரனாலும் மறுக்க முடியாது. ஜெயலலி தாவுக்கு அறிக்கை கூட எழுதத் தெரியாது. அதே மாதிரி சசிகலா பெயரில் வந்த அறிக்கையும் அவர் எழுதியது அல்ல. ஏற்கெனவே தயாரித்த அறிக் கையில் அவரை மிரட்டிக் கையெழுத்து மட்டும் வாங்கியுள்ளனர். ஜெயலலிதா, சசிகலா உறவு உடைந்துபோன கண்ணாடியை ஒட்டி வைத்ததைப் போன்றது. அதில், முன்பு இருந்த பாசம் இருக்காது. என் மீது பொய் வழக்கு போட்ட உள்துறைச் செயலர், டி.ஜி.பி., மத்திய மண்டல ஐ.ஜி. ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடந்து உள்ளேன். நீதிமன்றத்தில் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்'' என்றார் ஆவேசமாக.
கடுகடு முகத்துடன் பேசிய நடராஜன், பத்திரிகை களையும் விட்டு வைக்கவில்லை. சில கேள்விகளுக்கு, 'இந்தக் கேள்விக்கு நான் சொல்லும் பதிலை உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க மாட்டார்கள்...’ என்று நழுவிக்கொண்டார்.
நடராஜனின் கோபத்துக்கு ஜெயலலிதா ரியாக்ஷன் என்னவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக