வாஷிங்டன்:2001 செப்டம்பரில் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி அமெரிக்கா கைது செய்த ஐந்து பேரும் நீதிமன்றத்தில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.குவாண்டனாமோவில் கடந்த சனிக்கிழமை நடந்த விசாரணையின் போது முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காலித் ஷேக் முஹம்மது உள்ளிட்ட ஐந்து பேர் நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர்.கியூபாவில் அமெரிக்க கடற்படை தளமான
குவாண்டனாமோவில் உள்ள சிறைக் கொட்டகையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சித்திரவதைகள் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்கும் உரிமை மறுப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் மெளனம் சாதித்தனர்.
இதனை இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வலீத் பின் அத்தாஷின் வழக்கறிஞரான செரில் போர்மானும் இதர வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறை காவலர்கள் கொடூரமாக சித்திரவதைச் செய்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மனித உரிமை அமைப்புகளும் இவ்விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நீதிபதியின் கேள்விக்கு முதலில் பதிலளிக்க மறுத்த ரம்ஷி பினால்ஷிப் இறுதியில் இவ்வாறு கூறினார்: “எங்களை இனி நீங்கள் அதிகம் பார்க்க இயலாது. எங்களை கொலைச் செய்த பிறகு சிறைக்காவலர்கள் நாங்கள் தற்கொலைச் செய்ததாக கூறுவார்கள்” என்றார்.
பாகிஸ்தானைச் சார்ந்த காலித் ஷேக் 2003-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆனால், 2006-ம் ஆண்டு இவர் குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டார். இக்காலக்கட்டத்தில் அவர் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் ரகசிய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை சிவிலியன் நீதிமன்றத்தில் வைத்து விசாரணை நடத்தவேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஆதரவுடன் நடந்த முயற்சியை அமெரிக்க காங்கிரஸ் எதிர்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக