சென்னை: தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள வருவாய் வட்டங்களை பிரித்து 9 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது மக்களை நாடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதிலும், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளில் மக்களுடன் இணைந்து செயல்படுவதிலும் வருவாய்த்துறை முக்கியப் பங்காற்றுவதுடன், நிர்வாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த்துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் நடவடிக்கைகள் எனது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்படுகின்றன.
இதன்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தினை (தாலுகா) பிரித்து திருப்புவனத்தில் ஒரு புதிய வட்டமும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தினை பிரித்து கலசப்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தினை பிரித்து ஆலத்தூரில் ஒரு புதிய வட்டமும்,
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தினை பிரித்து கிணத்துக்கடவில் ஒரு புதிய வட்டமும், காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தினை பிரித்து திருப்போரூரில் ஒரு புதிய வட்டமும், கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தினை பிரித்து அன்னூரில் ஒரு புதிய வட்டமும்,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சங்கராபுரம் வட்டங்களை சீரமைத்து புதியதாக சின்னசேலத்தில் ஒரு வட்டமும், ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களை சீரமைத்து அந்தியூரில் ஒரு புதிய வட்டமும், நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து கொல்லிமலையில் ஒரு புதிய வட்டமும், ஆக மொத்தம் 9 வட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும்
இது தவிர, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62 வருவாய் வட்டங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காலவிரயம் இன்றி மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும், வட்டாட்சியர் அலுவலகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு நான்கு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வருவாய் வட்டங்களைப் பிரிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் கிராமங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அரசுக்கு பரிந்துரை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரைக் கொண்ட ஒரு அலுவலர் குழு அமைக்கப்படும்.
இக்குழு 2 மாத காலத்திற்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். இக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அரசு தக்க முடிவினை அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக