திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு ஒருங்கிணைப்புகுழுவின் தலைவர் உதயகுமார் தலைமையில் புதிய போராட்டத்தை அறிவித்துள்ளார். இடிந்த கரை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உதயகுமார் போராட்ட அறிவிப்பு : கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் பணி முழுமையடைந்து மின் உற்பத்தி துவங்க உள்ள நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் தலைமையில் இடிந்தகரை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு கூடங்குளத்தில் மின் உற்பத்தி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கியது. முன்னதாக உதயகுமார் மற்றும் அப்பகுதி மக்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டிருந்தது. கூடங்குளத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்றவுடன் தன்னுடைய போராட்ட வியூகத்தை மாற்றி அமைத்த உதயகுமார், தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறும் படி கோரிக்கை விடுத்தார். ஆனால் அரசு தரப்பு வழக்குகளை வாபஸ் பெற மறுத்து வந்தது. இந்நிலையில் புதிய போராட்ட அறிவிப்பாக வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளார்.கடந்த இருதினங்களுக்கு முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்பதாக இருந்த போராட்டக்குழுவினர் ஒரு சில காரணங்களால் ஒத்திவைத்திருந்தனர். மேலும் தங்களின் போராட்டத்தை இன்று (மே 9-ம் தேதி) நடத்த திட்டமிட்ட போராட்டக் குழுவினர், ராதாபுரம் தாசில்தார் சுப்பிரமணியத்திடம் இன்று தங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க உள்ளனர்.ஆனால் தாசில்தார் சுப்பிரமணியன் வாக்காளர் அடையாள அட்டைகளை தான் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தடை உத்தரவு நீடிப்பு: கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் பல்வேறு போராட்ட அறிவிப்புகளை அறிவித்து வரும் நேரத்தில் அணுமின் நிலையத்தை சுற்றிலும் 2 கி.மீ சுற்றளவிற்கு இருந்த 144 தடை உத்தரவு தற்போது 5 கி.மீ., வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது மே 31 வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் குவிப்பு : ஒரு புறம் உதயகுமாரின் வாக்காளர் அடையாள அட்டை திரும்ப ஒப்படைப்பு போராட்டமும், மற்றொருபுறம் தடை உத்தரவின் சுற்றளவு அதிகரிப்பு காரணமாகவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தி்ல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 15 கம்பெனிகளைச் சேர்ந்த போலீஸ் படையினர் பாதுகப்பு பணியை மேற்கொண்டு வருகி்ன்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக