வியாழன், செப்டம்பர் 06, 2012

சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு வெளிநாட்டில் நிலக்கரிக்காக கையேந்தும் மத்திய அரசு !

சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு வெளிநாட்டில் நிலக்கரிக்காக கையேந்தும் மத்திய அரசு
 சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு,  நிலக்கரிக்காக வெளிநாட்டில்  மத்திய அரசு கையேந்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வகையில் மிகக்குறைந்த  விலையில் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசின் பேரில் அவரது சகோதரருக்கும் நிலக்கரி சுரங்கம் வழங்கப்பட்டது இந்திய நிறுவனங்களின் நிலக்கரி தேவையை இந்திய நிலக்கரி நிறுவனத்தால் (சி.ஐ.எல்.) பூர்த்தி செய்ய முடியவில்லை.  

எனவே, நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன என்பது மத்திய அரசின் வாதமாக உள்ளது. ஆனால், மத்திய அரசின் வாதம் தவறு என்பது இந்திய நிலக்கரி நிறுவனத்தின் முந்தைய கடிதங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

தனியாருக்கு தாரை வார்த்து விட்டு, நிலக்கரிக்காக வெளிநாட்டில் கையேந்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக நிலக்கரி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி வந்தது உறுதி அளிக்கப்பட்டபடி நிலக்கரி சப்ளை செய்யவும், எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேலும் 130 சுரங்க  உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கடிதங்களில் வலியுறுத்தியது. 

ஆனால் நிலக்கரி அமைச்சகம் இதை கண்டுகொள்ளவில்லை. இப்போது ஊழல் பிரச்சினை எழுந்த பிறகுதான், நிலக்கரி அமைச்சகம் விழித்துக் கொண்டுள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் தொடர்பான பைல்கள் இப்போதுதான் நகர தொடங்கியுள்ளன. அங்கு அபரிதமாக கிடைக்கும்  நிலக்கரியை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து  விட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்ய, நிலக்கரிக்கான வாய்ப்புகளை தேடி மத்திய அரசு வெளிநாடு சென்றது. 

தென் ஆப்பிரிக்காவில் மொஸாம்பிக்கில், நிலக்கரி வளங்களை கண்டறியவும், வெட்டி எடுக்கவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமாக கோல் இந்தியா  ஆப்ரிக்கானா லிமிடெட்  என்ற நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கியது. 

இந்த நிறுவனத்தை நிர்வகிக்க இந்திய நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த 4 அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொஸாம்பிக்கை விட்டு சற்று தொலைவில் அமைந்துள்ள எட்டோ என்ற நகரத்தில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. 

இந்த நகரம் ஜம்பேஸி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல்  பாதிப்புகளை ஆராயவும், சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை  தயாரிக்கவும் ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது இந்த விவரங்கள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு தொடர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.பி. ஹன்ஸ்ராஜ் அஹிருக்கு, இந்திய நிலக்கரி நிறுவனம் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக