வாஷிங்டன்:இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்த நபரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் ஸெரிடோஸில் வசிக்கும் நகவ்லா பாசிலி நகவ்லா என்ற 55 வயது நபர் தாம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான் என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். பாசிலி தான் இறைத்தூதரை
இழிவுப் படுத்தும் திரைப்படத்தை தயாரித்தான் என்று ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், இதனை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. வங்கி மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாசிலி கடந்த ஆண்டு விடுதலையானான். அமெரிக்க போலீஸ் நேற்று பாசிலியிடம் விரிவான விசாரணையை நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. ஆனால், திரைப்படத்துடனான தனது தொடர்பை பாசிலி மறுத்துள்ளான். ஆனால், இதுத் தொடர்பாக கூடுதல் செய்திகள் வெளியாகவில்லை. இறைத்தூதரை இழிவுப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படத்தை இயக்கியவன் எகிப்து வம்சா வழியைச் சார்ந்த அமெரிக்காவில் வசிக்கும் அலன் ராபர்ட்ஸ் என்று ஏ.எஃப்.பி கூறுகிறது.
இதனிடையே, இறைத்தூதரை இழிவுப்படுத்தும் திரைப்படத்திற்கு எதிராக முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் வாழும் நாடுகளிலும் கண்டனப் போராட்டங்களும், பேரணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தூதரகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நடந்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
துனீசியாவில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று துனீசியாவில் முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எகிப்தின் கெய்ரோவிலும், யெமன் தலைநகரிலும் தொடர்ச்சியாக நான்காவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அந்தந்த நாடுகளின் கடமை என்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். மேற்காசியாவில் உள்ள தங்களின் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அமெரிக்கா மேற்காசியா பிராந்தியத்திற்கு கப்பல் படையை அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு பதிலடியாக அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தவும், தூதர்களை கொலைச் செய்யவும் அல்காயிதா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்காயிதாவின் யெமன் பிரிவு இந்த அழைப்பை விடுத்துள்ளது. லிபியாவில் உமர் முக்தாரின் வாரிசுகள் நடத்திய தாக்குதலைப் போல அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதலை நடத்த முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று அல்காயிதா அழைப்பு விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக