சென்னையைச் சேர்ந்த ரமேஷுக்கும், ஹேமலதாவுக்கும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது. ஓராண்டுக்குப் பின் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் ரமேஷும், அவரது தாயாரும் வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹேமலதா, போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, ரமேஷ் கைது செய்யப்பட்டார்.தன்னை ஜாமீனில் விடுதலை செய்யும்படி ரமேஷ் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதை எதிர்த்து ஹேமலதா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இறுதியில் ரமேஷ், மனைவியைக் கொடுமைப்படுத்தவில்லை என்று கூறிய நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது.
இதனிடையே, பொய் வழக்கு போட்டு தன்னைக் கொடுமைப்படுத்திய மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்குமாறு ரமேஷ், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், தன்னைக் கணவரிடம் சேர்த்து வைக்கும்படி ஹேமலதா கோரினார். இதை ஏற்ற குடும்ப நல நீதிமன்றம், விவாகரத்து வழங்க மறுத்தது.
இதை எதிர்த்து, ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மா ராவ், வேணுகோபால் ஆகியோர் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கினர். மனைவியால் கொடுமைக்குள்ளான கணவர் ரமேஷுக்கு விவாகரத்து அளித்து அவர்கள் தீர்ப்பளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக