இஸ்தான்புல்:துருக்கியில் ப்ரைமரி-செகண்டரி பள்ளிக்கூட பாடத் திட்டத்தில் புனித திருக்குர்ஆனும், இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி அவர்களின் வழிமுறையும்(சுன்னா) இடம்பெறச் செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.துருக்கியை ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் ரஜப் தய்யிப் எர்துகானின் தலைமையில் பாராளுமன்ற துணைத் தலைவர் கையெழுத்திட்டதன் மூலம் இத்திட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றது. மதசார்பற்ற எதிர்கட்சியான
ரிபப்ளிகன் பார்டிக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது பெரிய எதிர்கட்சியான நேசனலிஸ்ட் மூவ்மெண்டின் கட்சி பிரதிநிதியும் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்.
மசோதாவின் 9-வது பிரிவின்படி கட்டாய கல்வியின் காலவரம்பு 12 ஆண்டுகளாக(4+4+4) உயர்த்தப்பட்டுள்ளது. புனித திருக்குர்ஆனும், முஹம்மது நபி அவர்களின் வழிமுறையும்(சுன்னா) ப்ரைமரி மற்றும் செகண்டரி பாடத்திட்டத்தில் விருப்ப பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான பாட உபகரணங்களை தேர்வுச் செய்யவும், கற்பித்தல் துறையில் பேச்சாளர்களையும், தலைவர்களையும் வளர்த்தி எடுக்கும் வகையில் செகண்டரி பாடத்திட்டத்தை தயாரிக்கவும் கல்வித்துறைக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாடத்திட்டத்தில் திருக்குர்ஆன் தொடர்பான விஷயங்கள் எதுவுமில்லை. மதரீதியான, குணநலன்கள் தொடர்பான சில கருத்துக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் நிர்வாக சீர்திருத்தத்தின் பெயரால் துருக்கியை இஸ்லாமிய மயமாக்க அரசு முயல்வதாக எதிர்கட்சி மதசார்பற்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
2002-ஆம் ஆண்டு நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் கல்விதுறை சீர்திருத்தங்களுக்கு முயற்சித்து வருகிறது. ஆனால், நாட்டின் மதசார்பற்றக் கொள்கையின் பாதுகாவலர்கள் என கூறும் ராணுவத்தின் தலையீடுகள் காரணமாக இவற்றையெல்லாம் அமல்படுத்த இயலாமல் இருந்தது. ஆனால், தற்பொழுது ராணுவத்தின் அரசியல் செல்வாக்கு செல்லாக் காசாக மாறி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக