டெஹ்ரான்:ஈரான் பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அதிபர் அஹ்மத் நஜாதின் ஆதரவாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
65 இடங்களுக்கு நடந்த தேர்தலில் நஜாதின் முக்கிய எதிராளியும், பாராளுமன்ற சபாநாயகருமான அலி லாரிஜானி தலைமை வகிக்கும் பழமைவாத கட்சி 41 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளதாக ஈரான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
நஜாத் ஆதரவாளர்களுக்கு 13 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 11 இடங்களில் சுயேட்சைகள் வென்றுள்ளனர்.
மார்ச் மாதம் 225 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் எதிர்கட்சியினர் 180 இடங்களை கைப்பற்றினர். இதன் மூலம் ஈரானின் ஆன்மீக உயர் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈக்கு நெருக்கமான எதிர்கட்சிக்கு 290 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. காம்னஈக்கும் அஹ்மத் நஜாதிற்கும் இடையேயான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து பழமைவாதிகள் அரசுக்கு எதிராக திரும்பினர்.
எதிர்கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவது நஜாதிற்கு முக்கிய விவகாரங்களில் தீர்மானம் எடுப்பதற்கு தடையாக மாறும். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அஹ்மத் நஜாதிற்கு பின்னடைவாகும். தலைநகரமான டெஹ்ரானில் மட்டுமே அஹ்மத் நஜாத் ஆதரவாளர்களுக்கு எதிர்கட்சியை விட அதிக இடங்கள் கிடைத்துள்ளன. இங்கு 13 இடங்களில் நஜாத் ஆதரவாளர்கள் வெற்றிப்பெற்ற போது எதிர்கட்சிக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
வெளியுறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் முடிவெடுப்பதில் பாராளுமன்றத்திற்கு பெயரளவிலேயே அதிகாரம் உள்ளது. ஆனால், பொருளாதார கொள்கை உள்ளிட்ட உள்நாட்டு விவகாரங்களில் தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்ற தோல்வி நஜாதிற்கு தலைவேதனையாகும்.
2013-ஆம் ஆண்டு ஆட்சிகாலத்தை நிறைவுச் செய்யவிருக்கும் நஜாத், மானியத்தை நிறுத்தி விட்டு பெட்ரோலியம் மற்றும் எரிவாயுவின் விலையை உயர்த்தியதை புதிய சூழலில் வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இதற்கு தேவையான ஆதரவு கிடைக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக