புதுடெல்லி:ஹாமித் அன்சாரியை குடியரசு தலைவர் பதவிக்கு நிறுத்துகிறோம். ஆதரவு தாருங்கள் என்று காங்கிரஸ் கோரினால் அவரை ஆதரிப்பதில் எங்களுக்கு தயக்கம் ஏதுமில்லை என்று இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் பேட்டி அளித்தபோது இதனை தெரிவித்தார்.
மே 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இடதுசாரி கட்சிகள் கூடி குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் குறித்து தங்களுக்குள் விவாதிக்கும் என்று அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி அப்துல் கலாமை மீண்டும் இத் தேர்தலில் நிறுத்த விருப்பம் கொண்டுள்ளது. கலாமை ஆதரிப்பதில்லை என்பதில் இடதுசாரிக் கட்சிகள் இப்போதும் உறுதியாக உள்ளன என்பதை கராத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி. ராஜாவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ(அரசியல் தலைமைக் குழு) உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அரசியல் சார்ந்தவரா, அரசியல் சார்பற்றவரா என்பதல்ல முக்கியம், அவருக்கு அதிகபட்ச ஆதரவு இருக்கவேண்டும். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி விரைந்து தீர்மானித்து அறிவிக்க வேண்டும், இதில் தாமதப்படுத்துவதால் தேவையற்ற ஊகங்கள் ஏற்படும், இது ஆரோக்கியமானதல்ல.” என்றார்.
இதற்கிடையே ஹாமித் அன்சாரிக் குறித்து பா.ஜ.கவின் சுஷ்மா சுவாரஜ் கூறிய அரைவேக்காட்டுத் தனமான பேட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது:
“குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் ஒருவரைப்பற்றி அவ்வாறு வாய்த்துடுக்காக இப்படிக் கூறுவது முறையற்றது” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக