டாக்கா:1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்ட காலத்தில் போர் குற்றம் உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டி பங்களாதேஷின் இஸ்லாமிய இயக்க தலைவர் குலாம் ஆஸம் மீது சிறப்பு தீர்ப்பாயம் குற்றச்சாட்டை பதிவுச்செய்துள்ளது.
ஒன்பது மாதங்களாக நீண்ட போரில் சித்திரவதை, கொலை உள்ளிட்ட ஏராளமான குற்றங்களை 89 வயதான ஆஸம் புரிந்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர். இதனை மறுத்த ஆஸம், இவ்வழக்கு அரசியல் தூண்டுதல் என தெரிவித்தார்.
2010-ம் ஆண்டு நிறுவப்பட்ட பிறகு தீர்ப்பாயம், வழக்கு பதிவுச்செய்யும் முதல் இஸ்லாமிய இயக்க தலைவர் குலாம் ஆஸம் ஆவார்.
கிழக்கு பாகிஸ்தான் சுதந்திர நாடாக மாறுவதை தடுக்க பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து பணியாற்றினார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள பங்களாதேஷைச் சார்ந்தவர்களை விசாரணை நடத்த அவாமி லீக் அரசு சர்வதேச க்ரைம்ஸ் ட்ரிப்யூனலை நிறுவியது. ஜமாஅத்தே இஸ்லாமி இயக்க தலைவரான குலாம் ஆஸம் மீது சதித்திட்டம், குற்றங்களை திட்டமிடல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 5-ஆம் தேதி விசாரணை துவங்கும்.
முக்கிய எதிர்கட்சியான பங்களாதேஷ் நேசனலிஸ்ட் பார்டி, ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய கட்சிகளைச் சார்ந்த எட்டுபேர் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளை வேட்டையாட அரசு தீர்ப்பாயத்தை கருவியாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிபர கணக்கு கூறுகிறது. ஆனால், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொலைச் செய்யப்பட்டதாக சுதந்திர கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக