திங்கள், மே 14, 2012

பாராளுமன்றத்தில் மதிப்புமிக்க விவாதங்கள் குறைந்து வருவது துரதிஷ்டவசமானது – பிரதமர் மன்மோகன்சிங்!

புதுடெல்லி:பாராளுமன்றத்தில் மதிப்புமிக்க விவாதங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது துரதிஷ்டவசமானது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
பாராளுமன்ற இரு அவைகளின் முதல் அமர்வின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களவையின் மைய மண்டபத்தில் மன்மோகன்சிங் உரையாற்றினார்.
அப்பொழுது அவர் கூறியது:
தொடர்ந்து பாராளுமன்றத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நம்முடைய ஜனநாயகத்தை பூரண ஜனநாயகம் என்று கூற மாட்டேன்; ஆனால், செயல்பாடுள்ள ஜனநாயகம் என்று அழைக்கலாம். வேறுபட்ட நலன்கள், வேறுபாடுகள் ஆகியவற்றை அனுமதிக்கும் விதத்திலான வழிமுறைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் பாராளுமன்றம் கொண்டுள்ளது.
நமக்கே உரித்தான வழியில், நம் மீதான பழிகளை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். எனினும், இந்திய மக்கள் மற்றும் உலகப் பிரச்னை குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அடிக்கடி விவாதித்துள்ளது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்.
இந்நிலையில் இத்தகைய ஜனநாயக நிறுவனங்களை கேலிக் கூத்தாக்குபவர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளால் அதன் செயல்பாடுகள் பற்றிக் கேள்வி எழுகிறது. தினந்தோறும் இடையூறு செய்வது, ஒத்திவைப்புகள், கூச்சலிடுவது ஆகியன பாராளுமன்றத்தின் செயல்பாடுகளையே கேள்விக்குள்ளாக்கி விடுகின்றன. இதனால், ஏமாற்றமும் விரக்தியும் மக்களிடம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதன் மூலம், நாம் முன்னுதாரணமாகத் திகழ முடியும்.
மாநிலங்களவையில் பிரதமர் கூறியது: மாநிலங்களவையின் கவுரவத்தையும் மேன்மையையும் உறுப்பினர்கள் காப்பாற்ற வேண்டும். பாராளுமன்றத்தின் 60 ஆண்டுக்கால செயல்பாடு, அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றுவதாக உள்ளது. இந்தத் தருணத்தில், நாம் புதிய சகாப்தம் ஒன்றை எழுத வேண்டும்.
பாராளுமன்றம் சட்டங்களை இயற்றும் சபை மட்டுமல்ல; அது ஒரு விவாத மேடை. மதிப்புமிக்க பங்களிப்பினை அது தருகிறது. இரு அவை அமைப்பு முறையை நாம் ஏற்கிறோமோ இல்லையோ, அது நமது செயல்பாட்டை சார்ந்திருக்கிறது. அது நமது அரசியலமைப்பு சாசன சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று இரண்டாவது குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாராளுமன்றம் நமக்கு ஒரு பரிசோதனைக்கூடமாகும்.
எவ்வித சமூக, பொருளாதார தீர்வுகளை அடையவும் நாம் ஜனநாயகத்தையே சார்ந்திருக்கிறோம். அதுதான் உலக அளவில் நமது வளர்ச்சிக்குக் காரணம். எனவே, நாம் அனைவரும் ஜனநாயக அமைப்புகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் அவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம். மாநிலங்களவை ஒரு தன்னிகரற்ற அமைப்பாக விளங்குகிறது. ஒரே நேரத்தில் இது மாநிலங்களின் அவையாகவும் மூத்தோர்களின் சபையாகவும் திகழ்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் சட்டத்திருத்தம் மூலம் நிலச் சீர்திருத்தங்களை இந்த அவை மேற்கொண்டது. வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானிய ஒழிப்பு ஆகியவற்றுக்கான சட்டத் திருத்தங்களையும் மாநிலங்களவை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது என்றார் பிரதமர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக