ஓஸ்லோ:நார்வே நாட்டின் உட்டோயா தீவில் ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்கின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டாக்களில் இருந்து இறந்த உடலில் கீழே படுத்திருந்து தப்பியதாக அச்சம்பவத்தில் உயிர் தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ப்ரெவிக்கிடம் விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்றத்தில் 17 வயதான இங்வில்ட்லாரின் தனது பீதி நிறைந்த அனுபவத்தை விவரித்தார்.
ப்ரெவிக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய உடன் தனது மீது கிடந்த இளம்பெண்ணின் மொபைலை எடுத்து எமர்ஜென்சி பிரிவை தொடர்புகொள்ள முயற்சித்ததாக அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியது:மொபைல் ஃபோன் சார்ஜர் வாங்கச் சென்ற நான், துப்பாக்கிச் சத்தம் கேட்டபொழுது ஏன் என்று எனக்கு புரியவில்லை. பின்னர் ஆட்கள் ஓடுவதை கண்டபொழுது நானும் அவர்களுடன் ஓடினேன். அடுத்துள்ள ஒரு கஃபேயில் நான் நுழைந்தேன். நானும் இன்னொரு இளம்பெண்ணும் ஒரு பியானோவின் பின்னால் சென்று மறைந்து நின்றோம். ஆனால், எங்களை கண்டவுடன் ப்ரெவிக் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இரண்டு பேர் மீதும் தோட்டா தாக்கிய பொழுதும், என்னுடன் இருந்த பெண் தோட்டா பாய்ந்து இறந்து என் மீது விழுந்தாள்.
துப்பாக்கிச்சூடு முடியும் வரை உடலை அசைக்காத நான், இறந்த பெண்ணின் அடியில் அசையாமல் கிடந்தேன். சம்பவம் நடந்து முடிந்து, தலையை உயர்த்திய பொழுது, உயிர் தப்பிய இதர இரண்டு பேரையும் அந்த அறையில் கண்டேன். மரணித்த பெண்ணின் செல்ஃபோனை எடுத்து எமர்ஜென்சி செல்லுடன் தொடர்புகொள்ள முயன்றபொழுதும் தொடர்பு கிடைக்கவில்லை. பின்னர் எனது தாயாரை அழைத்து நான் ஆபத்தில் சிக்கியிருப்பதை தெரிவித்தேன்’ என்று இங்வில்ட் கூறினார்.
கூட்டுப் படுகொலையில் உயிர் தப்பிய இதர நபர்களும் தங்களது அனுபவத்தை நீதிமன்றத்தில் விவரித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தின் படத்தை நீதிமன்றத்தில் காட்டியபொழுது, தான் ஒருபொழுதும் நினைவுகூற விரும்பாத நிமிடங்கள் அவை என்று இங்வில்ட் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நார்வே நாட்டில் வலதுசாரி பயங்கரவாதியான ப்ரெவிக், உட்டோயா தீவில் 69 பேரையும், ஓஸ்லோவில் 7 பேரையும் கொடூரமாக சுட்டுக் கொன்றான். ப்ரெவிக் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் தான் செய்தது குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக