புதுடெல்லி:தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களை சமாதானப்படுத்த மத்திய அரசால் இயலவில்லை. தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்(என்.சி.டி.சி) நிறுவுதல் தொடர்பாக விவாதிக்க நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்த சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
நாடு முழுவதும் தீவிரவாத செயல்களை ஒழிக்கப்போவதாக கூறி சிறப்பு அதிகாரத்துடன் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. மாநில உரிமையை பறிக்கும் செயல் எனக் கூறி பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீவிரவாத தடுப்பும் மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த பிரச்னை குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டெல்லி விஞ்ஞான் பவனில் மாநில முதல்வர்கள் மாநாடு நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியது: “தீவிரவாத செயல்களை தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் மற்ற இதர அமைப்புகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். புதிய பாதுகாப்பு கட்டமைப்பில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் முக்கிய தூணாக இருக்கும்.
தீவிரவாதிகளுக்கு எல்லைகள் கிடையாது. பல நாடுகளில், பல பகுதிகளில் அவர்கள் காலூன்றியுள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல் புதிய கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிட மனித பலம் மட்டும் போதாது. இந்த போராட்டத்தில் தொழில்நுட்பமும் முக்கிய ஆயுதம். எனவே, மத்திய, மாநில அரசுகளும் கூட்டாக இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்” என்று ப.சிதம்பரம் கூறினார்.
மேற்குவங்காள முதல்வரும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான மமதா பானர்ஜி கூறுகையில், “மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது துரதிர்ஷ்டம். மாநில விஷயங்களில் தலையிடும் வகையில் மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கை, மத்திய, மாநில அரசுகள் இடையேயான நம்பிக்கையின்மையை அதிகரிக்கச் செய்கிறது. இது பல மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியள்ளது. கைது அதிகாரத்துடன் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது, நாட்டின் கூட்டாட்சி அமைப்பை ஸ்தம்பிக்க செய்கிறது. எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.” என்றார்.
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறுகையில், “தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது கூட்டாட்சி விதிமுறைக்கு எதிரானது. உளவு அமைப்புகளுக்கு கைது செய்யும் சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டால், அது அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படும். அவசரநிலையின் போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என பிரபல அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுபோல தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் அதிகாரமும் தவறாக பயன்படுத்தப்படும். எனவே, அதை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.” என்றார்.
கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தனது உரையில், “தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் அதிகாரத்தின் மூலம் கைது செய்யப்படுவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவும் பாதுகாப்பு படை சிறப்பு அதிகார சட்டம் போன்றது தான்” என்று தெரிவித்தார்.
உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் சார்பாக அவரது உரையை உ.பி. கிராம பஞ்சாயத்து அமைச்சர் பல்ராம் யாதவ் வாசித்தார். அதில், “எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டு மாநில போலீசாரின் ஆதரவு மற்றும் ஆலோசனையுடன் நடத்தப்பட வேண்டும். உள்ளுர் போலீசாருக்கு தான் கைது செய்யும் அனுபவம் உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் கவுடா கூறும்பொழுது, “தேடுதல் வேட்டை, கைது, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை தேசிய தீவிரவாத தடுப்பு மைய(என்.சி.டி.சி) அதிகாரிகள் எடுத்துவிட்டு, உள்ளூர் போலீசாருக்கு பெயருக்கு தகவல் தெரிவிப்பார்கள். தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் அதிகாரம், மாநில போலீஸ் அதிகாரத்தை முடக்குவது போல் உள்ளது.” என்று தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது உரையில், “என்.சி.டி.சி. அமைக்க மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆணையைத் தாற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். அது பற்றி ஆலோசிக்க மாநில முதல்வர்கள் கொண்ட துணைக் குழுவை அமைக்க வேண்டும். அதில், மத்திய உள்துறை இணை அமைச்சர் உறுப்பினராக இருக்கலாம். அந்தக் குழு பயங்கரவாத தடுப்பு உத்திகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கும். ஏகமனதாகத் தீர்வு எட்டப்படும் வரை, என்.சி.டி.சி. விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் எந்தவொரு கூட்டமும் உரிய பலனைக் கொடுக்காது.” என்றார்.
மேலும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், நரேந்திரமோடி, சட்டீஷ்கர் முதல்வர் ரமண்சிங், ம.பி முதல்வர் சவுகான் ஆகியோர் என்.சி.டி.சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக