1992- டிசம்பர் 6 சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். 450 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ் பரிவாரம் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கிய நாள். அன்று அந்த மதவெறிப்பிடித்த நாசகரக் கும்பல் இடித்துத் தள்ளியது மசூதி கட்டிடத்தை மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரியமான மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மை கோட்பாட்டையே தகர்த்தனர். இதனால்
தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரான தோழர் ஜோதிபாசு, இவர்களை காட்டுமிராண்டிக் கும்பல் என்று வர்ணித்தார். பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரே நாளில் நடந்தேறிய எதிர்பாராத நிகழ்வல்ல. ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றி திட்டமிட்டே செய்த வேலை அது. அத்வானி நடத்திய ரத யாத்திரை, செங்கல் பூஜை, கரசேவை என தொடர்ச்சியாக கலவர விதைகளை தூவி நடத்தப்பட்ட அராஜக அறுவடை தான் பாபர் மசூதி இடிப்பு என்பது.
பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. 1992 டிசம்பர் 6 ம்தேதிக்கும் 13ம் தேதிக்கும் இடையில் நடந்த கலவரங்களில் பலி யானவர்கள் எண்ணிக்கை 1200 பேர். மிகவும் பாதிக்கப்பட்ட மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவில் 259 பேர், குஜராத்தில் 246 பேர், உ.பி.யில் 201 பேர், ம.பி.யில் 161 பேர், ராஜஸ்தானில் 48 பேர், தில்லியில் 15 பேர், கர்நாடகத்தில் 73 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் பலி எண்ணிக்கை இதை விட கூடுதலான எண்ணிக்கையிலேயே இருக்கும்.
குறிப்பாக இந்தியாவில் வர்த்தக தலைநகரம் என்று கருதப்படும் மும்பையில் நடந்த கலவரங்கள் பயங்கரமானவை. பாஜக மற்றும் சிவசேனை கட்சிகள் இதை முன்னின்று நடத்தின. சிவசேனை கட்சி என்பது தென்னிந்தியர்களுக்கு எதிராக குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக துவக்கப்பட்ட கட்சி. பிரதேச வெறியையும், மதவெறியையும் ஒரு சேர நஞ்சு போல் கக்கி வளர்ந்தது இந்த கட்சி. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து டிசம்பர் 8ம்தேதி சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே தனது பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில் “ராம ஜென்ம பூமிக்காக போராடி அதை கைப்பற்றிய இந்துக்களே வெற்றியாளர்கள். முஸ்லிம்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் அவர்கள் விஷமத்தனமான எழுச்சிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாபரின் டூம்களுக்கு ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கும் ஏற்படும்” என்று எழுதியிருந்தார். 1992 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மும்பையில் நடந்த வன்செயல்களில் 557 பேர் இறந்தனர். நாளொன்றுக்கு 125 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. சிவசேனை மற்றும் பாஜகவினர் முஸ்லிம்களை குறி வைத்து வேட்டையாடியதோடு அவர்களது கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடினர். பெரும்பான்மை வகுப்புவாதம் சிறுபான்மை வகுப்புவாதத்தை ஊட்டி வளர்க்கிறது.
இவை இரண்டுமே ஆபத்தானவை. நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது. 1993ம் ஆண்டு மார்ச் 12 அன்று மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. சிலமணி நேரங்களில் 10 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 257 பேர் மாண்டு போயினர். பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சிவசேனை- பாஜக கூட்டணிக்கே பலனளித்தது. 1995 மார்ச் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது. மும்பையில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்க நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் முந்தைய காங்கிரஸ் அரசு விசாரணை கமிஷனை அமைத்திருந்தது. 1995ல் பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த கமிஷன் விசாரணையை சீர்குலைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
1998 பிப்ரவரி 16ம் தேதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. மும்பையில் நடந்த வன்செயல்களுக்கு சிவசேனை மற்றும் பாஜக தலைவர்களே பொறுப்பு என்று அந்தக் கமிஷன் குற்றம் சாட்டியது. காவல்துறை மற்றும் நிர்வாகமும் தமது பணியை பாரபட்சமின்றி நிறைவேற்றவில்லை என்றும் கமிஷன் கூறியது. மும்பையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை வெறி யாட்டத்தின் விளைவே தொடர் குண்டு வெடிப்பு என்றும் கமிஷன் கணித்தது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை அடிப்படையில் எந்தவித நடவடிக்கையும் மதவெறியர்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை என்பது உறுத்தும் உண்மையாகும். அதுமட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை அடிப்படையிலும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
நீதிபதி லிபரான் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி 2009ல் தான் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. பாபர் மசூதி இடிக்கப்பட போவது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோருக்கு முன்பே தெரியும் என்று லிபரான் கமிஷன் கூறியிருந்தது. பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதி என்பதை லிபரான் கமிஷன் அம்பலப்படுத்தியிருந்த போதும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, சாத்வி ரிதம்பரா, பஜ்ரங் தள தலைவர் வினய் கத்யர், விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை. அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு கொண்டே கிடக்கிறது. இதனிடையே சர்ச்சைக்குரிய இடம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு, நியாயத்தின் அடிப்படையிலானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் விமர்சித்தன. தற்போது சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
அயோத்தியில் கோயில் கட்டுகிறோம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் அதிகாரத்தை பிடிப்பதே ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் நோக்கம். ராமர் பெயரைக்கூறி மசூதியை இடித்த அந்தக் கூட்டம் தற்போது அதே ராமர் பெயரைக் கூறி தமிழக மக்களின் 160 ஆண்டு கால கனவான சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளது.
ராமாயணக் கதை நடந்ததாக கூறப்படும் பகுதி முழுவதும் இன்றைய மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இலங்கைக்கோ, இராமேஸ்வரத்திற்கோ ராமர் வந்ததாகவோ, இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை மீட்க பாலம் கட்டியதாகவோ எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. இயற்கையாக உருவான மணல் திட்டை ராமர் கட்டிய பாலம் என்று கூறி, தமிழக மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு நலம் தரும் திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளன மதவெறி சக்திகள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் மேடையாக துவக்கப்பட்டது தான் ஜன சங்கம் எனும் கட்சி. அதனுடைய இன்றைய அவதாரம்தான் பாரதிய ஜனதா. இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தளம் என்பதெல்லாம் அதனுடைய பல்வேறு பிரிவுகளேயன்றி வேறல்ல. இவர்களின் குருமாரான குருஜி கோல் வால்கர் கூறுகிறார் “பண்டைய இந்தியா என்பது இந்துஸ்தானம் தான். இந்தியா என்பது இந்துக்களின் நாடாகவே இருக்க முடியும். இதை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும். இந்துக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு” இதன் பொருள் என்னவென்றால் சமஸ்கிருதம் மட்டுமே இந்துஸ்தானத்தின் மொழி. அவர்களது மொழியில் சொல்லப்போனால் அது மட்டுமே தேவ பாஷை. தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளெல்லாம் நீஷ பாஷை. வருணாசிரம தர்மத்தின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பையே அவர்கள் தர்மம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் இந்தியா என்பது பன்முக பண்பாடு, மொழி, நாகரிகம் கொண்டது. கலாச்சார தேசியம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் மதவழி சிறு பான்மை மக்களின் பண்பாட்டு உரி மையை மட்டும் மறுக்கவில்லை. மொழி வழி பண்பாட்டையும் மறுக்கின்றனர். கோல்வால்கர் மேலும் கூறுகிறார்- இந்துஸ்தான பண்பாடு மற்றும் மொழியை ஏற்றுக் கொள்ளாதாவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. மற்றவர்கள் இந்து பண்பாட்டோடு தங்களை முற்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். தங்களது சொந்த இன, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்களேயானால் அவர்கள் அந்நியர்களாகவே கருதப்படுவர். அவர்கள் இந்து பண்பாடு, மொழி மற்றும் மதத்தை ஏற்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும். இதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சித்தாந்தம்.
வேறு வார்த்தைகளில் பாஜகவினர் இந்த கருத்தை கூறினாலும் அவர்களுடைய சித்தாந்த அடையாளமும் அதுதான். நம்முடைய இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்டது. ஆனால் இவர்கள் அதற்கு முற்றிலும் எதிரானவர்கள். எனவே தான் ஆட்சியிலிருந்த போது அரசியல் சாசனத்தையே திருத்தி எழுதும் முயற்சியில் இறங்கினார்கள். பன்முக பண்பாடு, பல்வேறு மொழிகள் என்பது தான் இந்திய ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் உருண்டோடிட்டன. ஆனால் அவர்களது இடிப்பு வேலை இன்னமும் முடியவில்லை. காசி, மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டுமென்று கொக்கரித்து வருகின்றனர். கலவரத்தை தூண்டி விடுவது தான், மக்கள் ஒற்றுமையை சிதைப்பதுதான் அதிகாரத்திற்கு செல்லும் அதிகாரப்பூர்வ வழி என்பது தான் அவர்களது எண்ணம். மதவெறி, சாதி வெறி உள்ளிட்ட அடையாள அரசியல் உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக திரட்டும் முயற்சியை தடுத்து விடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட “சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்த தீர்மானம்” மிகச் சரியாக இதைக் குறிப்பிடுகிறது.
“நமது மக்கள் மத்தியில் உள்ள மத உணர்வை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு வகுப்பு வாத உணர்ச்சிகளை தூண்டி விடுவதன் மூலம் தொழிலாளி வர்க்க மற்றும் சுரண்டப்படும் மக்களின் ஒற்றுமையை வகுப்பு வாதச் சக்திகள் நேரடியாக சீர்குலைக்கின்றன. எனவே வகுப்புவாதத்தை முறியடிப்பதற்கான ஒரு உறுதியான போராட்டம் இல்லாமல் நமது நாட்டில் புரட்சிகர முன்னேற்றம் என்பது சாத்தியமற்றது” மதவெறி சக்திகளை பின்னுக்குத் தள்ளுவதன் மூலமே, அதன் மூலம் மக்கள் ஒற்றுமையை கட்டுவதன் மூலமே வர்க்க ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இத்தகைய தெளிவுடன் மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியது அவசியமாகும்.
தீக்கதிர் நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக