கெய்ரோ:எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றுள்ளதாக இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற தகவலின் படி முர்ஸி 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக்கை விட முன்னிலைப்
பெற்றுள்ளார்.
இன்று காலை(திங்கள் கிழமை) இஃவானுல் முஸ்லிமீன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் முர்ஸியின் வெற்றி அறிவிக்கப்பட்டது. முர்ஸி 12 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகளையும்,அஹ்மத் ஷஃபீக் 11 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளதாகவும் அவ்வமைப்பு கூறுகிறது.
El-Shorouk, சுதந்திர எகிப்திய பத்திரிகை கூறுகையில் முர்ஸி 6,820,944 வாக்குகளையும், ஷஃபீக் 5,490,158, வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
வெற்றி குறித்து முர்ஸி கூறுகையில், “அல்லாஹ்வுக்கே நன்றி!அவனே எகிப்திய மக்களை நேரான வழியில் நடத்துவான்” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எகிப்தை சிவில், ஜனநாயக, அரசியல் சாசன, நவீன தேசமாக கட்டமைப்பதற்கு பாடுபடுவேன்” என தெரிவித்தார்.
முர்ஸியின் ஆதரவாளர்கள் இச்செய்தியை கேட்டவுடன், ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பினர்.
21-ஆம் தேதி அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக