மும்பை : பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர் கான் சத்யமேவ ஜெயதே எனும் பெயரில் ரியாலிட்டி ஷோ எனப்படும் சமூக விழிப்புணர்வை தூண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருவது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் நடிகர்கள் கலை நிகழ்ச்சி, குரோர்பதி போன்ற நிகழ்ச்சிகளையே நடத்துவார்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு அமீர்கான் சமூக தீமைகளை தோலுரிக்கும் வகையில் பெண் குழந்தைக் கொலை உள்ளிட்ட பல்வேறு சமூக தீமைகளை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொன்றாய் நடத்தி வருவது பல்வேறு மட்டத்தில் மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தொடரில் சென்ற வாரம் சிறு பிரச்னைகளுடன் வரும் நோயாளிகளிடம் பல்வேறு இல்லாத வியாதிகளை சொல்லி பணம் கறக்கும் மருத்துவர்களை பற்றியும் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கீனம் குறித்தும் தன்னுடைய நிகழ்ச்சியில் அமீர்கான் படம் பிடித்து காட்டியிருந்தார்.இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம் மருத்துவதுறையை அமீர்கான் கேவலப்படுத்துவதாகவும் உடன் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள அமீர்கான் மருத்துவ துறையின் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் நல்ல மருத்துவர்களை தாம் கேவலப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் வழக்கை சந்திக்க தயார் என்றும் அமீர்கான் கூறியுள்ளார். உண்மையில் இத்தகைய முறைகேடான மருத்துவர்கள் தாம் மருத்துவதுறையை கேவலப்படுத்துவதாகவும் அமீர்கான் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக