பயிற்சி டாக்டர்கள் வைத்த மூன்று கோரிக்கைகளுக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார். சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக பயற்சி டாக்டர்கள் தொடர்ந்த போராட்டம், ஐந்தாவது நாளான நேற்று முடிவுக்கு வந்தது. அவசர சிகிச்சை பிரிவில், பயிற்சி டாக்டரை, தாக்கியதாகக் கூறி, அவர்கள் அனைவரும் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோரிக்கை : அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள அவசர அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், அவசர எலும்பு முறிவு உள்ளிட்ட அனைத்து அவசர சிகிச்சை பிரிவிலும், நோயாளி உடன், ஒருவர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதை, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக, இரட்டை கதவு கொண்ட வாசல் மற்றும் அனுமதி சீட்டுப் பெற்ற உறவினர் மட்டுமே உள்ளே வரவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதை வலியுறுத்தி ஐந்து நாட்கள் போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தலைமையின் கீழ், ஆலேசானைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில், சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் மற்றும் பயிற்சி டாக்டர்கள் 12 பேர் கலந்து கொண்டனர். ஆலோசனையின் முடிவில், பயிற்சி டாக்டர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நடவடிக்கை : இது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறியதாவது: பயிற்சி டாக்டர்கள் வைத்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. டாக்டரை தாக்கிய நபர் மீது மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை பாதுகாப்பு குறித்து முதன்மைச் செயலர் தலைமையின் கீழ், டாக்டர்கள் பிரதிநிதி, பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதி, முதுகலை மாணவர்கள் பிரதிநிதி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து ஆய்வு அறிக்கை மேற்கொள்ளப்படும். அவசரப் பிரிவில் நோயாளிகள் உடன் வருபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும், அனுமதிச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கோரிக்கையை ஏற்றுக் கொண்டதும், பயிற்சி டாக்டர்கள் ஆரவாரத்துடன் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
வாபஸ் ஏன்? : அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயலர், பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக அரசு டாக்டர்கள் சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி நேற்று முன்தினம் பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினோம். நேற்று அரசு மருத்துவர்களும் பணி புறக்கணிப்பு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால், பயிற்சி மருத்துவரை தாக்கிய, நபர் மீது நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்றும், நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டும், நேற்று அரசு மருத்துவர் சங்கத்தின் சார்பில் நடக்க இருந்த பணி புறக்கணிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
10 ஆண்டு ஜெயில் : கடந்த 2008ல், அமல்படுத்தப்பட்ட மருத்துவமனை பாதுகாப்பு சட்டப்படி, மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்களை தாக்கினாலோ அல்லது மருத்துவமனை உபகரணங்களுக்கு சேதம் விளைவித்தாலோ ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யலாம். அவர்கள் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டால், 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். இச்சட்டத்தை இயற்றி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இப்பிரிவில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால், மருத்துவர்கள் மட்டும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பணி புறக்கணிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில், வழக்கம் போல், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக