செவ்வாய், ஜூன் 12, 2012

சிறுபான்மையினர் உள் ஒதுக்கீடு: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

Minority sub quota - SC  refuses to ban High Court judgment!புதுடெல்லி:ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் உத்தரவை ரத்துச்செய்த ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான ஆதரவு
ஆவணங்களை(supportingdocuments) தாக்கல் செய்ய தவறிய மத்திய அரசை கடிந்துகொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறும், புதன்கிழமை இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தது.
ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சிறுபான்மையினருக்கான 4.5 உள் ஒதுக்கீட்டிற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்தது.
ஐ.ஐ.டி யில் சேர்க்கைப் பெற்றுள்ள சிறுபான்மை பிரிவு மாணவர்கள் 325 பேரின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் ஆந்திர மாநிலத்தின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,மத்திய அரசு போதிய ஆதரவு ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை.
அப்பொழுது அரசு அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வஹன்வாத்தியிடம் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கேஹார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆதரவு ஆவணங்களை தாக்கல் செய்யாததற்கு தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
“போதிய ஆதரவு ஆவணங்களை தாக்கல் செய்யாமல் உயர்நீதிமன்ற தீர்ப்பில் நீங்கள் எவ்வாறு தவறை காணமுடியும்?” என பெஞ்ச், அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பியது. பின்னர் ஆதரவு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள் புதன்கிழமை மீண்டும் இம்மனுவை விசாரிப்பதாக கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக