திங்கள், ஜூன் 11, 2012

தன்னிடம் வருபவர்களை நட்டாற்றில் விடுபவர் தான் ஜெயலலிதா. புதுக்கோட்டை பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஆவேசம் !

vijayakanth in Pudhukottaiபுதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவடைந்ததால், தே.மு.தி.க., சார்பில் பிரசாரத்தை நிறைவு செய்யும் விதமாக சின்னப்பா பூங்காவில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை மூன்று மணிக்கு துவங்கிய கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, இந்திய தேசிய லீக் மாநிலச் செயலர்
நாகூர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
எப்போது தீர்வு? கூட்டத்தில், தே.மு.தி.க., வேட்பாளர் ஜாகிர்உசேனை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தின்போது, புதுக்கோட்டையை புதுப்பொலிவு ஆக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு முன் இரண்டு முறை முதல்வராக இருந்தபோது, ஏன் புதுக்கோட்டையை புதுப்பொலிவு பெற வைக்கவில்லை?
பிரச்னை தீராது? அதே போல், நேற்றைய பிரசாரத்தில் கரண்ட் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டு, 2015ல் மின்திட்டங்கள் செயல்படத் துவங்கும் என்று பேசியுள்ளார். இதிலிருந்து, இன்னும் மூன்று ஆண்டுக்கு கரண்ட் பிரச்னை தீராது, என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
நூறாண்டு பேசும் சாதனையை ஓராண்டில் செய்து விட்டதாகக் கூறும் ஆளுங்கட்சியினர், ஏன் அமைச்சர் பட்டாளத்துடன் புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வரவேண்டும்? நீங்கள் சாதனை செய்திருந்தால் மக்களே உங்களை ஆதரித்து வெற்றி பெற வைத்துவிடுவார்கள். நீங்கள் தந்த வேதனையால்தான் மக்களைத் தேடி வந்து, பணம் கொடுத்து அவர்களின் ஓட்டை விலைக்கு வாங்குகின்றனர்.
அரசின் நலத்திட்டங்களை அ.தி.மு.க., வினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.
பிரச்னையை தீர்ப்பேன்: ஜாகிர்உசேன் ஜெயித்தால், 10 நாளில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பேன் என்று கூறினேன். அதுபோல், புதுக்கோட்டை பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்து ஜெயலலிதா ஏதும் சொல்லவில்லை. கடந்த ஆட்சியில் ஐந்து இடைத்தேர்தல்களை கண்டு பயந்தது தானே அ.தி.மு.க., என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒருமுறை மாற்றி ஓட்டுப் போடுங்கள். தன்னிடம் வருபவர்களை நட்டாற்றில் விடுபவர் தான் ஜெயலலிதா.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.கடிகாரத்தை பார்த்து...பொதுக்கூட்டத்தில் தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் பேசும்போது, அடிக்கடி தனது வாட்சை பார்த்தபடியே பேசினார். ஐந்து மணியாகியும் விஜயகாந்த் பேசியதைப் பார்த்த அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மணியாகி விட்டதை சுட்டிக்காட்டியதை யடுத்து, பேச்சை முடித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக