திங்கள், ஜூன் 11, 2012

கஸ்மியின் ரிமாண்ட் நீட்டித்த உத்தரவில் நீதிபதியின் கையெழுத்து இல்லை

கஸ்மிபுதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் அஹ்மத் முஹம்மது கஸ்மியின் விசாரணை காவலை நீட்டித்த உத்தரவில் நீதிபதியின் கையெழுத்து இல்லை என்பதை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் கண்டுபிடித்தது.கஸ்மியை சிறையில் அடைத்தபிறகு நடத்தப்பட்ட விசாரணைத் தொடர்பான அனைத்து ஃபயல்களையும் வெள்ளிக்கிழமை பரிசோதித்த
பொழுது கூடுதல் நீதிபதி எஸ்.எஸ்.ரதி இதனை கண்டுபிடித்தார். விசாரனையில் முன்னேற்றம் எதுவுமில்லை என கூறிய நீதிமன்றம், டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவின் விசாரணை கால அளவை நீட்டித்து உத்தரவிட்டது. விசாரணை காவலை நீட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஸ்மி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்த செசன்ஸ் நீதிமன்றம் விசாரணை தொடர்பான அனைத்து ஃபயல்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
அப்பொழுது ரிமாண்ட் நீட்டித்த உத்தரவில் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி வினோத் யாதவின் கையெழுத்து இல்லை என்பதை நீதிபதி கண்டுபிடித்தார்.
ரிமாண்ட் கோரிக்கையின் நகலை கஸ்மியிடம் ஒப்படைக்காமலேயே விசாரணை நீதிமன்றம் காவலை நீட்டித்தது என்று கஸ்மியின் வழக்கறிஞர் மஹ்மூத் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரிமாண்ட் கோரிக்கையின் நகலை கஸ்மியின் வழக்கறிஞருக்கு வழங்காமல் எவ்வாறு அவரால் அரசு தரப்பு வழக்குரைஞர் எழுப்பும் வாதத்திற்கு எதிர்க்க முடியும் என கேள்வி எழுப்பிய கூடுதல் செசன்ஸ் நீதிபதி, விசாரணையில் மேலும் வெளிப்படையான தன்மை வேண்டும் என்று டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தியது.
வழக்கு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களில் பலதும் காணாமல் போனதாக கூடுதல் செசன்ஸ் நீதிபதி முன்னர் கண்டுபிடித்தார். கஸ்மியை 20 தினங்கள் போலீஸ் காவலில் வைக்க முதன் முதலாக  முதன்மை மெட்ரோபாலின் மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவு மோசமான கையெழுத்தால் எழுதப்பட்டது என்றும், அது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இவ்வழக்கின் விசாரணை ஜூலை 3-ஆம் தேதி மீண்டும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக