திங்கள், ஜூன் 18, 2012

கலகலத்துக்கொண்டு இருக்கும் காவி கூடாரம் !

டெல்லி: ஜூன், 16. இந்திய வலதுசாரி அரசியலின் மூக்கணாங் கயிற்றை பிடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலை குறிவைத்து திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் வேளையில், மும்பையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு முடிவுற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் காவிப் படையின் பலத்தை விட பலகீனத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியது.
கட்டுப்பாடும், ஒழுக்கமும், கட்சி கட்டமைப்பும் காணாமல் போன காங்கிரஸுக்கு பதிலாள் நாங்கள்தாம் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க மார்தட்டியது. ஆனால், அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சியையே முறியடிக்கும் வகையில் உட்கட்சி பூசலிலும், ஊழலிலும் பா.ஜ.க முன்னணி வகிப்பதை கண்டு வருகிறோம்.
ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அக்கட்சியின் கடைசி வார்த்தையாக சோனியாகாந்தி தற்பொழுதும் கருதப்படுகிறார். ஆனால், பா.ஜ.கவிற்கோ அந்த பாக்கியமும் இல்லை.
தவறான கட்சியின் சரியான மனிதர் என்று ஊடகங்களாலும் சில அரசியல் தலைவர்களாலும் புகழாரம் சூட்டப்பட்ட  அடல் பிஹாரி வாஜ்பேய் உயிரோடு இருந்தாலும் பா.ஜ.கவினரே அவரை மறந்துவிட்டனர்.
‘லோக புருஷ்’ என்றும் ‘இரும்பு மனிதர்’ என்றும் புகழாரம் சூட்டப்பட்ட எல்.கே.அத்வானி பா.ஜ.கவில் ஓரங்கட்டப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. என்.டி.ஏவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் அதன் பிரதமராக அத்வானி இருக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி. இந்த சூழலில் தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அவர் மும்பையில் நடந்த பேரணியை புறக்கணித்தார்.
தற்சமயம் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் முன்னால் தேசிய செயற்குழுவும், நிதின் கட்கரியும் மண்டியிட்டது அத்வானிக்கு ரோஷத்தை ஏற்படுத்திவிட்டது. மக்களவை எதிர்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜும், தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்த மும்பை பேரணியை புறக்கணித்தார்.
மறுபுறமோ தனக்கு முற்றிலும் பிடிக்காத சஞ்சய் ஜோஷியை தேசிய செயற்குழுவில் இருந்து ராஜினாமாச் செய்ய வைத்த பிறகே செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் நரேந்திர மோடி. இதனைத் தொடர்ந்து கட்கரிக்கு 2-வது முறையும் தலைவர் பதவியை உறுதிச்செய்ய கட்சி சட்டத் திட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.க கட்சி சட்டப்படி ஒருவர் மீண்டும் தலைவராக கூடாது என்பதாகும். ஆனால், கட்கரிக்கு வாரிசை கண்டுபிடிக்க முயற்சிப்பது இருட்டில் துளாவுவது போலாகும் என்பதை உணர்ந்த கட்சி வேறு வழியில்லாமல் கட்சி சட்டத் திட்டத்தை திருத்தி மீண்டும் கட்கரியையே தலைவராக நியமித்தது.
கடந்த முறை வயது குறைந்த கட்கரி தலைவரானதே ஆர்.எஸ்.எஸ்ஸின் அதீத தலையீடு காரணமாகும். ஆனால் இம்முறை தங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட சஞ்சய் ஜோஷியை ராஜினாமாச் செய்ய வைத்தது ஆர்.எஸ்.எஸில் ஒரு குழுவினருக்கு ஜீரணிக்க முடியவில்லையாம்.
கர்நாடகாவில் சதானந்தா கவுடா-எடியூரப்பா இடையே நிலவும் கடுமையான இழுபறி பா.ஜ.கவை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் வேளையில் ராஜஸ்தானிலும் வசுந்தராஜே-குலாப்ஜந்த் கடாரியா மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளத்தின் நிதீஷ்குமாரைப் போலவே துணை முதல்வரான பா.ஜ.கவின் சுசில் குமாரருக்கும் நரேந்திர மோடியை பிரதமர் பதவி வேட்பாளராக முன்னிறுத்துவதில் உடன்பாடு இல்லை.
2010-ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலின் போது மோடியை பீகாரில் கால் வைக்கவே அவர்கள் அனுமதிக்கவில்லையே.
இந்தியாவில் 2-வது  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
‘காகம் உட்கார பனம் பழம் விழுந்த’ பழமொழியைப் போல கிடைத்த வாய்பை பயன்படுத்த முடியாத (அதற்கு தகுதியில்லை என்பது வேறு விஷயம்) அளவுக்கு ஊழலிலும், உட்கட்சி பூசலிலும் பா.ஜ.க சிக்கி தவிக்கிறது.
அனைத்து வரம்புகளையும் கடந்து அதிகரித்துள்ள விலைவாசி மற்றும் ஊழலால் விழிபிதுங்கி நிற்கிறது மன்மோகன்சிங் அரசு. இந்தியாவில் பெரும்பாலும் விலைக்குறைந்த இரண்டு பொருட்கள் இந்திய குடிமகனும், இந்திய ரூபாய் நாணயமும் ஆகும். முற்றிலும் தோல்வியை தழுவிய தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைதான் இவற்றுக்கு காரணம் என்பதை புரிந்த பிறகும் மரபணுவில் ஏற்பட்ட கோளாறை முறியடித்து மாத்தி யோசிக்க நமது பிரதமருக்கோ, அவரது திட்ட வல்லுநர் அலுவாலியாவுக்கோ இயலவில்லை.
வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கதைபோல காவிக்கூடாரம் கலகலத்துப் போயுள்ளது.
ஐ.மு அரசின் அவலத்தை நாட்டு மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக உட்கட்சி பூசலில் பா.ஜ.க சிக்கி தவிப்பது மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.க ஆதரவில் எம்.பியான ராம்ஜெத்மலானிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாம்.
என்.டி.ஏ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்ட அமைச்சர் பதவிக் கிடைக்கும் என்ற நப்பாசையில் ஏற்பட்ட ஆதங்கமோ என்னவோ? தனது அங்கலாய்ப்பை கடிதம் மூலம் நிதின் கட்காரிக்கு தெரிவித்துள்ளார் ஜெத்மலானி.
பாரதீய பாசிசத்தின் பயங்கரவாத முகமான சங்க்பரிவாரத்தின் கூடாரத்தில் ஏற்பட்டுள்ள கலகம் குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள். அதேவேளையில் ஒரு மாற்று அரசியலின் வெற்றிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பது குறித்த கவலை நாட்டில் உள்ள நல்லெண்ணம் கொண்டோருக்கு ஏற்படுவது இயல்பே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக