தமிழ்நாடு தேவர் கூட்டமைப்பின் மாநில தலைவர் சண்முகபாண்டியன், தேவர் இளைஞர் பேரவை மாநில தலைவர் கணேசன் ஆகியோர் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-கர்நாடகாவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை அரசு சீல் வைத்துள்ளது. நித்யானந்தாவும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்து மதுரை ஆதீன மடத்தில் தங்கி உள்ளார்.
பிடதி ஆசிரமத்தில் உள்ள தங்க ஆபரணங்கள், பணங்கள் கண்டெய்னர் லாரி மூலம் பெங்களூரில் இருந்து கொண்டு வந்து மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள நித்யானந்தா ஆதீன மடத்தில் தங்கி இருப்பது ஆதீன மடத்தின் விதிகளுக்கு முரணானது. கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்த நித்யானந்தா மீது தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் தமிழக அரசும் மவுனம் காத்து வருவது ஏன் என்று தெரியவில்லை. மடத்தில் உள்ள நித்யானந்தாவை வெளியேற்றக்கோரி வருகிற 27-ந்தேதி தேவர் கூட்டமைப்பு, தேவர் இளைஞர் பேரவை, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
போராட்டத்தின் போது நித்யானந்தாவை வெளியேற்றுவோம். சீடர்கள் என்ற பெயரில் அவரது அடியாட்களை மடத்தில் தங்கவைத்துள்ளார். அவர்களையும் அப்புறப்படுத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக