புதன், ஜூன் 06, 2012

உயிருக்குப் போராடும் பெண் கைதி !

ரமல்லா: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பெண் கைதியான லீனா ஜெர்பூனி கடுமையான உடல்நலக் குறைவால் தற்போது உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கின்றார் என பலஸ்தீன் கைதிகள் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கல்லீரலில் கட்டி ஒன்று உருவாகி, அது பெரிதாய் வளர்ந்துள்ள நிலையில் மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணிக்கு, ஆக்கிரமிப்புச் சிறை வைத்தியசாலை மருத்துவர்கள் போதிய மருத்துவ சிகிச்சை வழங்காமல் தொடர்ச்சியாகப் புறக்கணித்துவருகின்றனர்.
இதனால், இவர் சுமார் 20 கிலோ கிராம் எடை இழப்புக்கு உட்பட்டு தற்போது மிக மோசமான உடல்நிலையுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார். மிக விரைவாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு கட்டி அகற்றப்படாவிட்டால், அவர் உயிரிழக்க நேரலாம் என பலஸ்தீன் கைதிகள் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தம்முடைய சக கைதியின் நோய் உபாதையைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாத மற்ற பலஸ்தீன் பெண் கைதிகள் யாவரும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தை அச்சுறுத்தியதை அடுத்து, லீனா ஜெர்பூனி 1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசத்தில் அமைந்துள்ள மீர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

என்றபோதிலும், மிக மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு பெண் நோயாளி என்ற மனிதாபிமானம் சிறிதும் இன்றி, வைத்தியசாலைக் கட்டிலோடு சேர்த்து அவரது கைகளும் கால்களும் இரும்புச் சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வெறுமனே கண்துடைப்பு நாடகம் நடத்தி லீனாவை ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து வைத்தியசாலைக்கு மாற்றியுள்ள ஸியோனிஸ சிறை நிர்வாகம், இதுவரை எந்த ஒரு சிறப்பு வைத்திய நிபுணரும் அவரைப் பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், அடிப்படை மனித உரிமைகள் மிருகத்தனமான முறையில் மீறப்பட்டுவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சக்திகளின் பிடியில் இருந்து தற்போது உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பலஸ்தீன் பெண் கைதியையும் அவர் போன்ற பிறரையும் விடுவிக்கத் துரிதமாய் முன்வருமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களையும், மனிதாபிமான ஆர்வலர்களையும் நோக்கி பலஸ்தீன் கைதிகள் மையம் கோரிக்கை விடுத்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக