வெள்ளி, ஜூன் 08, 2012

ஃபஸீஹ் எங்கள் கஸ்டடியில் இல்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு !

Fasih Mahmoodபுதுடெல்லி:சவூதி அரேபியாவின் ஜுபைலில் இருந்து சவூதி-இந்திய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவின் கஸ்டடியில் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், ஃபஸீஹ் இந்தியாவின் கஸ்டடியில்தான் இருக்கிறார் என்று
அவரது மனைவி நிகாத் பர்வீன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வழக்கு முதன்மையானது(seriousness)  என கூறிய உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் எழுத்து மூலம் மத்திய அரசு பதிலளிக்கும் வகையில் விசாரணையை ஜூன் 11-ஆம் தேதி ஒத்திவைத்தது.
ஃபஸீஹ் இந்தியாவின் கஸ்டடியில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தன. ஆனால், ஃபஸீஹ் மீது இந்திய புலனாய்வு ஏஜன்சிகள் தேசத்துரோக குற்றத்தை சாட்டுவதாக முதன்முதலாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஃபஸீஹ் எங்கிருக்கிறார்? என்பதை தெரிவிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசு வழக்குரைஞருக்கு கடைசி அவகாசமாக அனுமதித்த புதன்கிழமை காலையில் கூட அவர் மத்திய அரசின் பதிலை சமர்ப்பிக்கவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசின் வழக்குரைஞர் கவுரவ் பானர்ஜி நான்கு கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் அளித்தார்.
ஃபஸீஹின் விவகாரத்தில் மே 16-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை மத்திய அரசு நடத்திய தகவல் தொடர்புக் குறித்த ஆதாரங்களாக பானர்ஜி கடிதங்களின் நகல்களை நீதிமன்றத்தில் அளித்தார்.
ஃபஸீஹ் மீது சாட்டப்பட்டுள்ள தேசத்துரோக செயல்பாடுகளின் பெயரால் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அரசு வழக்குரைஞர் பானர்ஜி தெரிவித்தார்.
மேலும் ஃபஸீஹ் எந்த இந்திய புலனாய்வு ஏஜன்சியின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று தீர்க்கமாக் பானர்ஜி கூறியபொழுது, உச்சநீதிமன்ற நீதிபதிகளான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜகதீஷ் சிங் கேஹார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “ஃபஸீஹ் இந்தியாவின் கஸ்டடியில் இல்லை எனில் அவர் எங்கிருக்கிறார்?” என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த பானர்ஜி, “அவர் சவூதி போலீஸின் கஸ்டடியில் இருக்கவோ அல்லது இல்லாமலோ இருக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். இவ்விவகாரத்தை தற்பொழுது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கையாளுகிறது.
சவூதி அரேபியாவில் இந்திய தூதர், சவூதி அதிகாரிகளுடன் நிரந்தர தொடர்பில் உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் சவூதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய தூதரும், சவூதி அதிகாரிகளும் இதுத்தொடர்பாக புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று பானர்ஜி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளையில், அரசு வழக்குரைஞரின் வாதம் சரியில்லை என்றும், ஃபஸீஹை கைது செய்யும்பொழுது இந்திய அதிகாரிகளும் இருந்தார்கள் என்றும், ஃபஸீஹ் இந்தியாவின் கஸ்டடியில்தான் இருக்கிறார் என்றும் ஃபஸீஹின் மனைவி நிகாத் பர்வீனுக்காக ஆஜரான வழக்குரைஞர் நவ்ஷாத் அஹ்மத் கான் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்பொழுது நீதிமன்றம், “மத்திய அரசு தங்களின் கஸ்டடியில் இல்லை என்றல்லவா கூறுகின்றார்கள். சவூதி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விபரங்களை அரசு சமர்ப்பித்த பிறகு திங்கள் கிழமை மீண்டும் விசாரணை தொடரும்.” என்று தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக