புதன், ஜூன் 20, 2012

ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும்,அஸ்தமனத்தையும் பார்க்கும் சீன விண்வெளி வீரர்கள் !

Chinese astronauts saw 16 times sun rise and sun set per day
விண்வெளிக்கு சென்றுள்ள சீன வீரர்கள் மூன்று பேர், ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கின்றனர்.
விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து, விண்ணில் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளன. இதற்கு போட்டியாக, சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும், 2020க்குள் இந்த பணிகளை
முடிக்க, சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த ஆய்வு மையத்துக்கு, "டியான்காங்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆய்வு மையம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக, "ஷென்சு-9' என்ற விண்கலத்தை, சீனா கடந்த வாரம் விண்ணில் செலுத்தியது. இதில், முதன் முறையாக, விண்வெளி வீரர்களுடன், லியூ யாங், 34, என்ற விமான பைலட்டும் சென்றுள்ளார்.
இவர்கள் விண்ணில், 13 நாட்கள் தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையே, ஷென்சு விண்கலம், டியான்காங் விண்வெளி நிலையத்துடன், நேற்று முன்தினம் இணைந்தது. சீனாவின் தரைகட்டுப்பாட்டு தளத்திலிருந்து நேற்று, இவர்களுக்கு இ-மெயில் அனுப்பப்பட்டது.

6 மணிக்கு விழிப்பு: இ-மெயிலில் போட்டோ, வாசகங்கள், வீடியோ ஆகியவை அனுப்பப்பட்டன. இவைகள் தங்களுக்கு கிடைத்ததாக, மூன்று விண்வெளி வீரர்களும் பதில் அனுப்பியுள்ளனர். சீன நேரப்படி, காலை 6 மணிக்கு தூங்கி எழுந்து விடுவதாகவும், ஒரு வீரர் தூங்கும் போது மற்றவர்கள் விழித்திருப்பதாகவும், தாங்கள் தங்கியுள்ள அறையின் வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதாகவும், தாங்கள் தங்கியுள்ள விண் ஆராய்ச்சி மையம், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றுவதால், 24 மணி நேரத்தில் 16 சூரிய உதயத்தையும், 16 சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதாக, இவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக