இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், முலாயம்சிங் யாதவ் போன்றோரை சந்தித்து பேசினார்.
சோனியாவுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி வேட்பாளராக ஹமீது அன்சாரியை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பிரணாப் நிறுத்தப்பட்டால் ஆட்சேபனை இல்லை. நாங்கள் ஆதரிப்போம் என்று மம்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியை மம்தா ஆதரிக்க சில காரணங்கள் உள்ளன. இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் யாரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் கிடையாது.
இப்போது பிரணாப் முகர்ஜிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை பிரணாப் மூலம் நிறைவேற்ற மம்தா முயற்சிக்கிறார். பிரணாப் ஜனாதிபதி பதவிக்கு வந்தால், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் முதன் முதலில் நாட்டின் உயர் பதவிக்கு வந்த பெருமை அம்மாநிலத்துக்கு கிடைப்பதுடன், அவருக்கு இப்பதவி கிடைக்க பாடுபட்ட மம்தாவுக்கு அந்த மாநிலத்தில் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்.
இதை மனதில் வைத்துதான் மம்தா காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜிக்கு பல்வேறு கட்சிகளிடையே உள்ள ஆதரவை மூலதனமாக்கி, தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ள மம்தா போட்டுள்ள திட்டம்தான், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு என்ற பலமான அஸ்திரம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர, ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் மோதல் இருந்து வருகிறது. ஜனாதிபதி தேர்தல் ஆதரவுக்காக மத்திய அரசு இவரிடம் பணிவாக நடந்து கொள்கிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு நிலைமை மாறலாம். இரு கட்சிகளுக்கும் உறவு முறிவு ஏற்படலாம். அந்த சமயத்தில் மத்திய அரசிடம் இருந்து உதவிகள் பெருவதில் சிக்கல் ஏற்பட்டால், ஜனாதிபதி மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்றும் மம்தா கருதுவதாக சொல்லப்படுகிறது.
இடதுசாரிகளுக்கும், மம்தாவுக்கும் ஏழாம் பொருத்தம் ஆகும். எப்போது எதிரும், புதிருமாகவே செயல்பட்டு வருபவர்கள். ஹமீது அன்சாரி இடதுசாரி அனுதாபி. இதனால்தான் அன்சாரிக்கு மம்தா வெளிப்படையாக எதிர்க்கிறார்.
பிரணாப் முகர்ஜியும், மம்தா பானர்ஜியும் நீண்ட காலமாக நட்பு பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட பிரணாப் முகர்ஜிதான் முக்கிய காரணம். அந்த வகையில், பிரணாப் மீது மம்தாவுக்கு மரியாதை உண்டு. இதுவும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்க காரணமாக கூறப்படுகிறது.
அன்சாரிக்கு உள்ள எதிர்ப்பு பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் வெளிப்படை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக